வரதராஜபுரத்தில் குடியிருப்பு பகுதியில் சூழ்ந்துள்ள மழை வெள்ளத்தை அகற்றும் பணி தீவிரம்
வரதராஜபுரத்தில் குடியிருப்பு பகுதியில் சூழ்ந்துள்ள மழை வெள்ளத்தை அகற்றும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
மழை வெள்ளம் அகற்றம்
காஞ்சீபுரம் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை மற்றும் நிவர் புயல் காரணமாக கனமழை பெய்து வந்த நிலையில் குன்றத்தூர் ஒன்றியத்தில் உள்ள 42 ஊராட்சிகளில் மழை வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தலின் பேரில் போர்க்கால அடிப்படையில் ஊரக வளர்ச்சி துறை ஊழியர்கள், மற்றும் ஊராட்சி ஒன்றிய ஊழியர்கள் 15 பொக்லைன் எந்திரங்கள் மூலம் கால்வாயை வெட்டி மழை நீரை வெளியேற்றியும் 28 ராட்சத மின் மோட்டார்களை கொண்டு மழை வெள்ளத்தை இறைத்து கால்வாயில் விடும் பணியும் துரிதமாக நடந்து வருகிறது.
அதிக அளவில் பாதிக்கப்பட்ட வரதராஜபுரம் ஊராட்சியில் உள்ள ராயப்பா நகர், பரத்வாஜ் நகர், அஷ்டலட்சுமி நகர், மகாலட்சுமி நகர், சாந்தி நிகேதன் நகர் மற்றும் மார்வெல் கண்ட்ரி, உள்ளிட்ட நகர் பகுதிகளில் மழை வெள்ளம் சூழ்ந்து குடியிருப்புகளில் புகுந்து விட்டது. மேலும் இந்த பகுதிக்கு அருகில் செல்லும் அடையாறு ஆற்றில் வெள்ளம் முழு கொள்ளளவுடன் வெளியே செல்வதால் மழை வெள்ளம் வெளியே செல்ல முடியாத நிலையில் உள்ளது.
உணவு பொட்டலங்கள்
குடியிருப்பு பகுதிகளில் 3 அடி முதல் 4 அடி வரை வெள்ளம் தேங்கி உள்ளது. வெள்ளம் அகற்றப்பட்டு வரும் நிலையில் வீடுகளில் இருந்து வெளிவர முடியாத பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசு சார்பில் உணவு பொட்டலங்கள், பால் பாக்கெட், பிரட் போன்றவற்றை பாதிக்கப்பட்டவர்களின் வீட்டுக்கே சென்று வட்டார வளர்ச்சி அலுவலர் அப்துல் நயிம்பஷா வழங்கினார். உதவி பொறியாளர் வசுமதி, ஒன்றிய பணி மேற்பார்வையாளர்கள் கவாஸ்கர், சதீஷ்குமார், ஊராட்சி செயலர் திலீப் ஆகியோர் உடன் இருந்தனர். மழை நீர் வடிகால் சுத்தம் செய்தல் மழை வெள்ளம் வடிந்த பகுதிகளில் துப்புரவு பணிகள் மேற்கொள்ளப்பட்டும் தொற்று நோய்கள் பரவாமல் இருக்க துப்புரவு பணியாளர்களை கொண்டு கிருமிநாசினி தெளித்தல், பிளச்சிங் பவுடர் தெளிக்கும் பணி துரிதமாக நடைபெற்று வருகிறது.
செங்கல்பட்டு மாவட்டம், காட்டாங்கொளத்தூர் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட ஆத்தூர் முதல் நிலை ஊராட்சியானது வடபாதி, தென்பாதி, வடகால், கணபதி நகர், பக்தவத்சலம் நகர், குப்பம், அம்பேத்கர் நகர், எம்.ஜி.ஆர் நகர், புவனேஸ்வரி நகர், புதிய குடியிருப்பு பகுதிகளான மெஜஸ்டிக் அவென்யூ, கோல்டன் அவென்யூ, கங்கை நகர், பாலாஜி நகர், மிடாஸ் சிட்டி போன்ற பகுதிகள் அடங்கியது. கடந்த சில நாட்களாக பெய்த பலத்த மழை காரணமாக அந்த பகுதியில் மழை நீர் தேங்கி கொசு உற்பத்தியாகி துர்நாற்றம் வீசுகிறது, மேலும் நோய் பரவும் சூழல் உள்ளது.
மழை நீடித்தால் வடகால் பகுதிக்குள் வெள்ளம் புகும் அபாயம் உள்ளது. வடபாதி பகுதிக்கு செல்லும் மேம்பாலத்தின் கீழ் முழங்கால் அளவு தண்ணீர் தேங்கி நிற்கிறது. ஆத்தூர் ஊராட்சியில் அனைத்து பகுதிகளையும் செங்கல்பட்டு மாவட்ட கலெடர் ஜான் லூயிஸ் பார்வையிட்டு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகத்திற்கு அந்த பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Related Tags :
Next Story