விவசாயிகளுக்கு ஆதரவாக பெரம்பலூரில், நூதன ஆர்ப்பாட்டம்


விவசாயிகளுக்கு ஆதரவாக பெரம்பலூரில், நூதன ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 7 Dec 2020 5:09 AM IST (Updated: 7 Dec 2020 5:09 AM IST)
t-max-icont-min-icon

பெரம்பலூரில், மாவட்ட அனைத்து தொழிற்சங்க, விவசாயிகள் சங்கங்களின் போராட்ட குழுவினர் தொடர் முழக்க ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

பெரம்பலூர்,

மத்திய அரசு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றிய 3 வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக பெரம்பலூரில், மாவட்ட அனைத்து தொழிற்சங்க, விவசாயிகள் சங்கங்களின் போராட்ட குழுவினர் தொடர் முழக்க ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் அவர்கள் நேற்று பெரம்பலூர் பழைய பஸ் நிலையம் அருகே உள்ள காந்தி சிலை முன்பு தட்டு ஏந்தியும், நெற்றியில் நாமமிட்டும், ஏர் கலப்பையை வைத்தும் நூதன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட தலைவர் செல்லத்துரை தலைமை தாங்கினார். இதில் அகில இந்திய விவசாய தொழிலாளா்கள் சங்கத்தின் மாநில செயலாளா் சின்னத்துரை சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினாா். இதில் கலந்து கொண்டவர்கள் டெல்லியில் போராடும் விவசாயிகளுடன் நிபந்தனையற்ற பேச்சுவார்த்தையை மத்திய அரசு நடத்த வேண்டும். 3 வேளாண் சட்டங்களை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும். மின்சார சட்ட திருத்த மசோதாவை திரும்ப பெற வேண்டும் என்பதனை வலியுறுத்தி பல்வேறு கோஷங்களை எழுப்பினர். தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கத்தின் மாநில செயலாளர் ஏ.கே.ராஜேந்திரன், காங்கிரஸ் கட்சியின் மாநில பொதுக்குழு உறுப்பினர் சிவாஜி மூக்கன், இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட செயலாளர் ஞானசேரகன், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட செயலாளர் தமிழ்மாணிக்கம், திராவிடர் கழகத்தின் மாவட்ட தலைவர் தங்கராசு, எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாவட்ட செயலாளர் ஷாஜகான் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர், சி.ஐ.டி.யு. தொழிற்சங்கங்களை சேர்ந்தவர்கள் உள்ளிட்ட பலர் இதில் கலந்து கொண்டனர்.

Next Story