மழையால் நிலக்கரியில் ஈரப்பதம் அதிகரிப்பு: தூத்துக்குடி அனல்மின்நிலையத்தில் மின்உற்பத்தி நிறுத்தம்
தூத்துக்குடியில் நிலக்கரி ஈரப்பதம் காரணமாக அனல்மின்நிலையத்தில் மின்சார உற்பத்தி நிறுத்தப்பட்டு உள்ளது.
அனல்மின்நிலையம்
தூத்துக்குடி அனல்மின்நிலையத்தில் 210 மெகாவாட் திறன் கொண்ட 5 மின்உற்பத்தி எந்திரங்கள் உள்ளன. இதன் மூலம் 1050 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கடந்த மாதம் 16-ந் தேதி பெய்த கனமழை காரணமாக தூத்துக்குடி அனல்மின்நிலைய வளாகத்தில் உள்ள திறந்தவெளி குடோனில் கொட்டி வைக்கப்பட்டு இருந்த நிலக்கரியில் ஈரப்பதம் அதிகரித்தது. இதனால் அதனை எரிப்பதில் சிக்கல் ஏற்பட்டு உள்ளது. இதனால் நிலக்கரியுடன் பர்னஸ் ஆயில் சேர்த்து எரித்து மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வந்தது.
உற்பத்தி நிறுத்தம்
அதே நேரத்தில் பல இடங்களில் மழை பெய்து வந்ததால், மின்சார தேவையும் குறைந்தது. இதனால் அனல்மின்நிலைத்தில் உள்ள மின்உற்பத்தி எந்திரங்கள் படிப்படியாக குறைக்கப்பட்டு வந்தன. நேற்று முன்தினம் பெய்த மழையால் மீண்டும் நிலக்கரி குடோனில் தண்ணீர் தேங்கியது. இதனால் நிலக்கரியை எரிக்க முடியவில்லை. மின்தேவையும் குறைவாக இருந்ததால், அனல்மின்நிலையத்தில் உள்ள 5 மின்உற்பத்தி எந்திரங்களும் நேற்று நிறுத்தப்பட்டன. இதனால் 1050 மெகாவாட் மின்சார உற்பத்தி பாதிக்கப்பட்டு உள்ளது.
மேலும் மின்தேவையை பூர்த்தி செய்யும் வகையில் மேட்டூரில் உள்ள அனல்மின்நிலையத்தில் முழு அளவில் மின்சார உற்பத்தி நடப்பதால், மின்சார தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பு இல்லை என்றும், இன்னும் ஓரிரு நாட்களில் நிலக்கரியின் ஈரப்பதம் குறைந்து விடும், அதன்பிறகு தேவைக்கு ஏற்ப மின்உற்பத்தி எந்திரங்கள் இயக்கப்படும் என்றும் அனல்மின்நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story