வீடுகளுக்கு 150 யூனிட் இலவச மின்சாரம் வழங்க நடவடிக்கை முதல்-அமைச்சர் நாராயணசாமி தகவல்


வீடுகளுக்கு 150 யூனிட் இலவச மின்சாரம் வழங்க நடவடிக்கை முதல்-அமைச்சர் நாராயணசாமி தகவல்
x
தினத்தந்தி 7 Dec 2020 6:24 AM IST (Updated: 7 Dec 2020 6:24 AM IST)
t-max-icont-min-icon

வீடுகளுக்கு 150 யூனிட் இலவச மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு இருப்பதாக முதல்-அமைச்சர் நாராயணசாமி தெரிவித்தார்.

பாகூர்,

பாகூர் பேட் பகுதியில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ராதாகிருஷ்ணன் தொகுதி மேம்பாட்டு நிதியில் ரூ.8.85 லட்சம் செலவில் அம்பேத்கர் 125-வது பிறந்த நாள் நினைவு நுழைவு வாயில் அமைக்கப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா நேற்று நடைபெற்றது. விழாவில் முன்னாள் எம்.எல்.ஏ., நீலகங்காதரன் வரவேற்றார். அமைச்சர் நமச்சிவாயம் முன்னிலை வகித்தார்.

அமைச்சர் கந்தசாமி, வைத்திலிங்கம் எம்.பி., விஜயவேணி எம்.எல்.ஏ., ஆகியோர் வாழ்த்தி பேசினர். முதல்-அமைச்சர் நாராயணசாமி சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு அம்பேத்கர் நினைவு நுழைவு வாயிலை திறந்து வைத்து, அங்குள்ள அம்பேத்கரின் உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். விழாவில், முதல்-அமைச்சர் நாராயணசாமி பேசியதாவது.

புதுச்சேரியில் அனைத்து குடும்பங்களுக்கும் 5 லட்ச ரூபாய் இலவச மருத்துவ காப்பீடு திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. அதற்கான தொகையை மாநில அரசே செலுத்தி விடும். வீடுகளுக்கு மாதத்திற்கு 150 யூனிட் இலவச மின்சாரம், இலவச குடிநீர் வழங்கிட நடவடிக்கை எடுத்து வருகிறோம்.

அரசு பள்ளியில் 10, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு இலவசமாக டேப்லெட் (கையடக்க கணினி) விரைவில் வழங்கப்படும். யார் தடுத்தாலும் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, சிறுபான்மை மக்களுக்கு துணையாக காங்கிரஸ் கட்சி நிற்கும். இவ்வாறு அவர் கூறினார்.

விழாவில், ஆதிதிராவிடர் நலத்துறை இயக்குனர் யஸ்வந்தையா, பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் சாய் சுப்ரமணியன், உதவி பொறியாளர் சுந்தரராஜன், பாகூர் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் மனோகரன், இந்திய கம்யூனிஸ்டு கட்சி பொதுக்குழு உறுப்பினர் ராமமூர்த்தி மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

Next Story