தமிழகத்தில் நிவர் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மத்திய குழுவினர் நேரில் ஆய்வு; சென்னையில் பல்வேறு இடங்களில் சேதங்களை பார்வையிட்டனர்
நிவர் புயலால் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பாதிப்பு ஏற்பட்டது.
இதைத்தொடர்ந்து பெய்த கனமழை காரணமாக உயிர் சேதம் மட்டுமின்றி பொருட்சேதமும் ஏற்பட்டு இருக்கிறது.
மத்திய குழு
நிவர் புயல் மற்றும் மழை காரணமாக தமிழகத்தில் ஏற்பட்ட சேதங்களை கணக்கிட மத்திய உள்துறை இணைச்செயலாளர் அசுதோஷ் அக்னிகோத்ரி தலைமையில் 7 பேர் கொண்ட குழுவினர் நேற்று முன்தினம் சென்னை வந்தனர்.
இந்த குழுவில் ஐதராபாத்தில் உள்ள மத்திய வேளாண்துறை எண்ணெய் வித்துகள் வளர்ச்சி இயக்குனர் மனோகரன், மத்திய சாலை போக்குவரத்துத்துறை மண்டல அதிகாரி ரணன் ஜெய்சிங், டெல்லியில் உள்ள மத்திய நிதித்துறை இயக்குனர் பர்தெண்டு குமார், மத்திய மின்சார குழும துணை இயக்குனர் ஓ.பி.சுமன், மத்திய ஊரக வளர்ச்சித்துறை இயக்குனர் தர்மவீர் ஜா, மத்திய மீன்வள மேம்பாட்டு ஆணையர் பால்பாண்டியன், சென்னையில் உள்ள மத்திய நீர் ஆணைய கண்காணிப்பு இயக்குனர் ஜெ.ஹர்ஷா ஆகியோர் இடம்பெற்றிருந்தனர்.
சென்னை வந்த மத்திய குழுவினர் எம்.ஆர்.சி.நகரில் உள்ள நட்சத்திர ஓட்டலில் தங்க வைக்கப்பட்டனர்.
2 குழுக்களாக ஆய்வு
இந்தநிலையில் மத்திய குழுவினர் நேற்று 2 குழுக்களாக பிரிந்து தங்களது ஆய்வை தொடங்கினர்.
அந்தவகையில் அசுதோஷ் அக்னிகோத்ரி, ரணன் ஜெய்சிங், பால்பாண்டியன், மனோகரன் ஆகியோர் உள்ளடங்கிய அதிகாரிகள் குழு நேற்று காலை 9.10 மணிக்கு ஓட்டலில் இருந்து புறப்பட்டனர்.
வேளச்சேரி ராம்நகர், பள்ளிக்கரணை சதுப்பு நில வன பகுதி, ரேடியல் சாலை, செம்மஞ்சேரியில் உள்ள சுனாமி குடியிருப்பு மற்றும் நூக்கம்பாளையம் உள்ளிட்ட இடங்களில் மத்திய குழுவினர் ஆய்வில் ஈடுபட்டனர். அதிகாரிகள் குழுவினருக்கு, பெருநகர சென்னை மாநகராட்சி தலைமை பொறியாளர் பாலசுப்பிரமணியம் தொடர்பு அதிகாரியாக இருந்து சேத விவரங்கள் குறித்து எடுத்துரைத்தார்.
வரைபடம் மூலம் விளக்கம்
அதனைத்தொடர்ந்து தாம்பரம் முடிச்சூர் பகுதிக்கு விரைந்தனர். முடிச்சூர் சீனிவாசநகரில் மழைநீர் குடியிருப்புகளை சூழ்ந்திருக்கும் காட்சிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். பின்னர் அமுதம் நகரில் உள்ள அடையாறு ஆற்றுப்பாலத்தில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது அதிகாரிகளிடம் அடையாறு ஆற்றில் எவ்வளவு நீர் செல்கிறது? கரை அகலப்படுத்தியது உள்ளிட்ட விவரங்கள் குறித்து மாநகராட்சி மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் விளக்கினர்.
பின்னர் அருகேயுள்ள மழைநீர் தேங்கிய பகுதிகளில் அதிகாரிகள் ஆய்வு செய்தனர். மேலும் குடியிருப்பு பகுதிகளில் சூழ்ந்திருக்கும் மழைநீர் அகற்றப்படும் பணிகளை இன்னும் வேகப்படுத்தலாம் எனவும் அதிகாரிகள் ஆலோசனை வழங்கினார். முடிச்சூர் பகுதியில் மழைநீர் தேங்க காரணம் என்ன? என்பது குறித்து வரைபடங்கள் மூலம் அதிகாரிகள் குழு அப்போது விளக்கம் அளித்தனர். முன்னதாக நூக்கம்பாளையத்தில் மழைநீர் பாதிப்புகள் குறித்து வீடியோ பட காட்சி அதிகாரிகளுக்கு திரையிட்டு காண்பிக்கப்பட்டது. அப்போது செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ஜான் லூயிஸ் வெள்ள பாதிப்புகள்
குறித்து அதிகாரிகளுக்கு விளக்கம் அளித்தார்.
சேதமடைந்த படகுகள்
பின்னர் அதிகாரிகள் குழுவினர் மாமல்லபுரம் நோக்கி விரைந்தனர். மாமல்லபுரத்தில் உள்ள நட்சத்திர ஓட்டலில் மதிய உணவு சாப்பிட்டு விட்டு, பின்னர் புதுச்சேரி பகுதியில் மழை பாதிப்பு விவரங்களை பார்வையிட சென்றனர்.
அதேவேளை பர்தெண்டு குமார், ஓ.பி.சுமன், தர்மவீர் ஜா மற்றும் ஜெ.ஹர்ஷா ஆகியோர் அடங்கிய மற்றொரு அதிகாரிகள் குழுவும் ஆய்வு மேற்கொண்டனர். இந்த குழுவின் தொடர்பு அதிகாரியாக பொதுப்பணித்துறை முதன்மை செயலாளர் மணிவாசகம் நியமிக்கப்பட்டிருந்தார். எழும்பூர் ஈ.வெ.ரா. சாலை, டாக்டர் அழகப்பா சாலையில் மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகளை பார்வையிட்டனர்.
காசிமேட்டில் புயலால் சேதமடைந்த படகுகளை பார்வையிட்டனர். எண்ணூர் துறைமுகத்தில் ரூ.70 லட்சத்தில் முகத்துவாரம் அகலப்படுத்தும் பணியை அதிகாரிகள் பார்வையிட்டனர். இப்பணிகள் குறித்து திருவள்ளூர் கலெக்டர் பி.பொன்னையா அதிகாரிகளுக்கு விளக்கம் அளித்தார்.
வாழை பயிர்கள் சேதம்
பின்னர் அத்திப்பட்டு புதுநகர் பகுதியில் மழைநீர் பாதிப்புகள் குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அப்போது ஊராட்சி மன்ற தலைவர் சுகந்தி வடிவேல் பாதிப்பு குறித்து எடுத்துரைத்தார். பின்னர் வஞ்சிவாக்கம் ஆரணி ஆறு கரையோர பகுதிகள் நெல்வாயல், ஆவடி ஆகிய பகுதிகளில் சேதமடைந்த வாழை பயிர்களை பார்வையிட்டனர். மதிய உணவுக்கு பிறகு காஞ்சீபுரம் மாவட்டத்தில் ஆய்வில் ஈடுபட்டனர். அப்போது வெள்ள பாதிப்புகள் குறித்து மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி ரவிகுமார் அதிகாரிகளுக்கு விளக்கம் அளித்தார்.
முன்னதாக என்.எல்.சி. வல்லூர் அனல் மின் நிலைய அலுவலகத்தில் மழைநீர் பாதிப்புகள் குறித்து வீடியோ பட காட்சி அதிகாரிகளுக்கு திரையிட்டு காண்பிக்கப்பட்டது.
Related Tags :
Next Story