குருபரப்பள்ளி அருகே ஆம்னி பஸ்சில் கொண்டு சென்ற ரூ.5 லட்சம் வெள்ளி நகைகள் திருட்டு
குருபரப்பள்ளி அருகே ஆம்னி பஸ்சில் கொண்டு சென்ற ரூ.5 லட்சத்து 25 ஆயிரம் மதிப்புள்ள வெள்ளி நகைகளை மர்ம நபர்கள் திருடி சென்றனர்.
நகைகள் திருட்டு
சேலம் சிவதாபுரத்தை சேர்ந்தவர் வீரமணி (வயது 36). இவர் சேலத்தில் உள்ள வெள்ளி நகை கடையில் வேலை பார்த்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு இவர் 3 பைகளில் 26 கிலோ வெள்ளி நகைகளை சேலத்தில் இருந்து ஆந்திர மாநிலம் செகந்திராபாத்துக்கு தனியார் ஆம்னி பஸ்சில் கொண்டு சென்றார்.
அந்த பஸ் கிருஷ்ணகிரி மாவட்டம் குருபரப்பள்ளி அருகே உள்ள குந்தாரப்பள்ளியில் ஒரு ஓட்டலில் இரவு சாப்பாட்டுக்காக நிறுத்தப்பட்டது. பஸ் டிரைவர் மற்றும் வீரமணி உள்ளிட்ட பயணிகள் அனைவரும் கீழே இறங்கி சாப்பிட சென்றனர். பின்னர் அவர்கள் அனைவரும் சாப்பிட்டு விட்டு மீண்டும் பஸ்சுக்கு வந்தனர். அப்போது வீரமணி அமர்ந்து இருந்த இருக்கை அருகில் வைத்திருந்த 10 கிலோ வெள்ளி நகைகள் இருந்த ஒரு பை திருட்டு போனது. அதன் மதிப்பு ரூ.5 லட்சத்து 25 ஆயிரம் ஆகும்.
போலீசார் விசாரணை
இதனால் அதிர்ச்சி அடைந்த வீரமணி இதுகுறித்து குருபரப்பள்ளி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். பஸ்சில் வைத்திருந்த வெள்ளி நகை திருட்டு போன சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
Related Tags :
Next Story