ஆண்டிப்பட்டி தாலுகாவில் நீர்வரத்து வாய்க்கால்கள் சீரமைக்கப்படாததால் வறண்டு கிடக்கும் கண்மாய்கள்


ஆண்டிப்பட்டி தாலுகாவில் நீர்வரத்து வாய்க்கால்கள் சீரமைக்கப்படாததால் வறண்டு கிடக்கும் கண்மாய்கள்
x
தினத்தந்தி 7 Dec 2020 10:58 AM IST (Updated: 7 Dec 2020 10:58 AM IST)
t-max-icont-min-icon

ஆண்டிப்பட்டி தாலுகாவில் நீர் வரத்து வாய்க்கால்கள் சீரமைக்கப்படாததால் கண்மாய்கள் வறண்டு கிடக்கின்றன.

ஆண்டிப்பட்டி,

ஆண்டிப்பட்டி தாலுகாவில் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் கடமலை-மயிலை ஒன்றியத்தில் 9 கண்மாய்களும், ஆண்டிப்பட்டி ஒன்றியத்தில் 9 கண்மாய்களும் உள்ளது. இந்த கண்மாய்கள் அனைத்திற்கும் வைகை ஆற்றில் இருந்து நீர்வரத்து வாய்க்கால்கள் உள்ளது. ஆனால் கண்மாய்களும், நீர்வரத்து வாய்க்கால்களும் போதுமான பராமரிப்பு இல்லாததால் சில கண்மாய்களை தவிர பெரும்பாலான கண்மாய்களில் பல ஆண்டுகளாக தண்ணீர் தேக்கப்படவில்லை.

இந்நிலையில் கடந்த ஆண்டு முதல் ஆண்டிப்பட்டி தாலுகாவில் உள்ள சில கண்மாய்கள், புனரமைப்பு திட்டத்தின் கீழ் சீரமைக்கப்பட்டது. இதையடுத்து கண்மாய்களின் கரைகள் பலப்படுத்தும் பணி நடைபெற்றது.

வறண்டு கிடக்கும் கண்மாய்கள்

ஆனால் நீர்வரத்து வாய்க்கால்கள் சீரமைக்கப்படவில்லை. இதன்காரணமாக புனரமைப்பு செய்த கண்மாய்களில் இதுவரையில் தண்ணீர் தேங்கவில்லை. தேனி மாவட்டத்தில் கடந்த மாதம் மழை பெய்தும், நீர்வரத்து வாய்க்கால்கள் சீரமைக்கப்படாததால் கண்மாய்களில் 5 சதவீத அளவிற்கு கூட தண்ணீர் தேங்கவில்லை. ஒருசில கண்மாய்கள் முற்றிலுமாக தண்ணீர் இன்றி வறண்டு கிடக்கிறது. நீர்தேங்க வேண்டிய கண்மாய்கள் கருவேல மரங்களும், முட்புதர்களும் நிறைந்து காட்சியளிக்கிறது.

கண்மாய்களை புனரமைப்பு செய்தவர்கள், நீர்வரத்து வாய்க்காலையும் சீரமைத்து இருந்தால் ஓரளவு தண்ணீராவது தேக்கியிருக்கலாம், வறட்சிபகுதியான ஆண்டிப்பட்டி தாலுகாவில் இனிவரும் காலங்களில் நிலத்தடிநீரை பெருக்கும் வகையில் நீர்வரத்து வாய்க்கால்களை சீரமைத்து கண்மாய்களில் தண்ணீரை தேக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகளும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story