கால்வாய் ஆக்கிரமிப்பு காரணமாக வீடுகளுக்குள் ஏரி தண்ணீர் புகுந்ததால் பொதுமக்கள் சாலைமறியல்


வீடுகளுக்குள் தண்ணீர் புகுவதை தடுக்க வலியுறுத்தி சாலை மறியல் நடைபெற்ற போது எடுத்த படம்
x
வீடுகளுக்குள் தண்ணீர் புகுவதை தடுக்க வலியுறுத்தி சாலை மறியல் நடைபெற்ற போது எடுத்த படம்
தினத்தந்தி 7 Dec 2020 11:02 AM IST (Updated: 7 Dec 2020 11:02 AM IST)
t-max-icont-min-icon

குடியாத்தம் அருகே கால்வாய் ஆக்கிரமிப்பு காரணமாக வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் திடீர் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது
குடியாத்தம் நெல்லூர்பேட்டை பெரிய ஏரி 5 ஆண்டுகளுக்குப் பிறகு நிரம்பி நேற்று காலையில் கோடி போனது. இந்த ஏரியில் இருந்து வெளியேறும் உபரிநீர் நெல்லூர்பேட்டை பகுதியில் உள்ள கால்வாய் வழியாக சாமுண்டிபுரம், புத்தர் நகர், செருவங்கி வழியாக செல்லும்.

பல ஆண்டுகளாக இந்த ஏரி நிரம்பி கால்வாய்களில் தண்ணீர் செல்லாததால் கால்வாய் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டும், தூர்ந்துபோயும் உள்ளது.

இந்தநிலையில் நேற்று காலையில் நிரம்பி வழிந்த நெல்லூர்பேட்டை ஏரியின் உபரி நீர், ஆக்கிரமிப்பு மற்றும் தூர்ந்துபோனதன் காரணமாக கால்வாய் வழியாக செல்ல முடியாமல் சாமுண்டிபுரம், புத்த நகர், புதுமனை, தனலட்சுமி நகர், செருவங்கி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்ததாக கூறப்படுகிறது.

சாலைமறியல்
இதனால் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் நேற்று மாலையில் குடியாத்தம் -மேல்பட்டி சாலையில், செருவங்கி அம்பேத்கர் சிலை அருகே ஆண்கள், பெண்கள் என 200-க்கும் மேற்பட்டோர் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது வீடுகளுக்கு புகுந்த தண்ணீரை அகற்றவும், ஆக்கிரமிப்பை அகற்றி கால்வாயில் தண்ணீர் செல்ல உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும் என வலியுறுத்தினர்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் குடியாத்தம் டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் சீனிவாசன் உள்ளிட்ட போலீசார் சென்று மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி உடனடியாக கால்வாய்களை சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும், அதுவரை தண்ணீர் செல்ல மாற்றுவழி செய்யப்படும் என உறுதியளித்தனர். அதைத்தொடர்ந்து பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தை கைவிட்டனர். இந்த மறியல் காரணமாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

மறியல் நடைபெற்ற இடத்திற்கு நீர்வள ஆதாரத் துறை, ஊரக வளர்ச்சித் துறை, நகராட்சி, வருவாய்த்துறை அதிகாரிகள் யாரும் வரவில்லை என காவல் துறை அதிகாரிகள் கூறினர்.

Next Story