நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளிடம் இருந்து கூடுதல் கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை அமைச்சர் எச்சரிக்கை


நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளிடம் இருந்து கூடுதல் கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை அமைச்சர் எச்சரிக்கை
x
தினத்தந்தி 7 Dec 2020 11:58 AM IST (Updated: 7 Dec 2020 11:58 AM IST)
t-max-icont-min-icon

நெல் கொள்முதல் நிலையங்களில், விவசாயிகளிடம் இருந்து கூடுதல் கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

கடத்தூர்,

கோபி தடப்பள்ளி- அரக்கன்கோட்டை பாசன பகுதிகளில் நெல் அறுவடைக்கு தயாராக உள்ள நிலையில் விவசாயிகளின் பயன்பாட்டிற்காக கோபி பங்களாபுதூர் ரோட்டில் நெல்கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டு உள்ளது. இதன் தொடக்க நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் சி.கதிரவன் தலைமை தாங்கினார். பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கலந்து கொண்டு, நெல் கொள்முதல் நிலையத்தை திறந்து வைத்தார். அதைத்தொடர்ந்து அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது கூறியதாவது:-

விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று கூடுதலாக நெல் கொள்முதல் நிலையங்கள் அமைக்கப்பட்டு உள்ளது, 90 ஆயிரம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. விவசாயிகளின் வாழ்வாதாரத்தை உயர்த்தவும், நியாயமான விலை கிடைக்கவும் அரசே நெல் கொள்முதல் நிலையங்களை திறந்துள்ளது. சேலம் மாவட்டம் ஆத்தூரில் ரூ.1,850 கோடி மதிப்பில் கால் நடை பூங்கா அமைக்க அடிக்கல் நாட்டப்பட்டு உள்ளது.

கடும் நடவடிக்கை

டெல்டா விவசாயிகளின் நலனுக்காக வேளாண் சிறப்பு மண்டலம் உருவாக்கப்பட்டு உள்ளது. அ.தி.மு.க. அரசு முழுவதும் விவசாயிகளுக்கான அரசாக உள்ளது. நெல் கொள்முதல் நிலையங்களில் வியாபாரிகள் கொள்முதல் செய்வதை தடுக்க அரசு சார்பில் குழு அமைக்கப்பட்டு உள்ளது. நெல் கொள்முதல் செய்யும் நிலையங்களில் விவசாயிகளிடம் இருந்து யாராவது கூடுதல் கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

மழை காலங்களில் நெல்லை சேமிக்க அரசு சார்பில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். வியாபாரிகள் கொண்டுவரும் நெல்லை கொள்முதல் செய்தால் அதற்கு துணை போகும் அதிகாரிகள் மீது மாவட்ட கலெக்டர் உரிய நடவடிக்கை எடுப்பார்.

இவ்வாறு அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கூறினார்.

இதில் ஆர்.டி.ஓ. ஜெயராமன், தாசில்தார் தியாகராஜன், நம்பியூர் ஒன்றிய அ.தி.மு.க. செயலாளர் தம்பி சுப்ரமணியம் உள்பட பலர் கலந்து கொண்டார்கள்.

Next Story