அண்ணா பல்கலைக்கழகத்தில் இளநிலை இறுதியாண்டு பயிலும் என்ஜினீயரிங் மாணவர்களுக்கு செய்முறை பயிற்சி வகுப்பு தொடங்கியது; பாடத்திட்ட வகுப்புகள் 14-ந் தேதி தொடங்கும்
அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள என்ஜினீயரிங் கல்லூரி இளநிலை இறுதியாண்டு மாணவ-மாணவிகளுக்கு நேற்று செய்முறை பயிற்சி வகுப்புகள் தொடங்கின. பாடத்திட்ட வகுப்புகள் வருகிற 14-ந் தேதி (திங்கட்கிழமை) முதல் தொடங்குகின்றன.
பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
தமிழகத்தில் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக கடந்த மார்ச் 25-ந் தேதி முதல் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு வருகிறது. அன்று முதல் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. அதன் பிறகு பல்வேறுகட்ட தளர்வுகளை தமிழக அரசு அறிவித்தபோதிலும், பள்ளி, கல்லூரிகள் திறப்பு மட்டும் அனுமதிக்கப்படாமல் இருந்து வந்தது.
பள்ளி, கல்லூரிகள் திறப்பு குறித்து அரசு சார்பில் மாணவர்கள் மற்றும் பெற்றோரிடம் கருத்து கேட்கப்பட்டது. இந்த நிலையில், சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின்கீழ் வரும் முதுநிலை இறுதியாண்டு என்ஜினீயரிங் மாணவர்கள் மற்றும் ஆராய்ச்சி படிப்பு மாணவர்களுக்கு கடந்த 2-ந் தேதி முதல் பாட வகுப்புகள் தொடங்கப்பட்டன.
8 மாதங்களுக்கு பிறகு
அதே நேரத்தில், இளநிலை என்ஜினீயரிங் படிப்புக்கான பாட வகுப்புகள் தொடங்கப்படாமல் இருந்து வந்தன. இந்த நிலையில், 8 மாதங்களுக்கு பிறகு இளநிலை இறுதியாண்டு மாணவ-மாணவிகளுக்கான வகுப்புகள் 7-ந் தேதி (நேற்று) முதல் தொடங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்து இருந்தது. அதன்படி, அண்ணா பல்கலைக்கழக வளாக என்ஜினீயரிங் கல்லூரியில் இளநிலை இறுதியாண்டு என்ஜினீயரிங் படிக்கும் மாணவ-மாணவிகள் நேற்று முன்தினம் முதலே விடுதிகளுக்கு வர ஆரம்பித்தனர்.
அண்ணா பல்கலைக்கழகத்தில் இளநிலை இறுதியாண்டு என்ஜினீயரிங் படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு நேற்று செய்முறை பயிற்சி வகுப்புகளும், புராஜெக்ட்டுகளுக்கான வழிகாட்டுதல்களும் நடத்தப்பட்டன. வழக்கமான பாடத்திட்ட (தியரி) வகுப்புகள் வருகிற 14-ந் தேதி முதல் தொடங்க உள்ளன.
கொரோனா தொற்றுக்கான வாய்ப்பு
அண்ணா பல்கலைக்கழகத்துக்கு வரும் மாணவ-மாணவிகள் அனைவருக்கும் நுழைவுவாயிலிலேயே உடல் வெப்பநிலை பரிசோதனை செய்யப்பட்ட பிறகே வளாகத்துக்குள் நுழைய அனுமதிக்கப்பட்டனர். விடுதியில் தங்கி படிக்கும் மாணவ-மாணவிகள் மற்றும் வீடுகளில் இருந்து படிக்கவரும் மாணவ-மாணவிகளும் நேற்று அண்ணா பல்கலைக்கழகத்துக்கு வருகை தந்தனர்.
சமூக இடைவெளியை கடைப்பிடிப்பதற்காக செய்முறை பயிற்சி வகுப்புகள் ஒரே நேரத்தில் அனைத்து மாணவர்களுக்கும் நடத்தப்படாமல், பல பிரிவுகளாக பிரிக்கப்பட்டு நடத்தப்பட்டது. மேலும், பல்கலைக்கழக விடுதியிலும் ஒரு அறைக்கு ஒருவர் அல்லது 2 நபர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டதாக விடுதி மாணவர்கள் தெரிவித்தனர். எனினும், போதுமான கழிப்பிட வசதிகள் மட்டும் செய்துதரப்படவில்லை என்று அவர்கள் ஆதங்கப்பட்டனர். அதாவது 5 அல்லது 10 பேருக்கு ஒரு கழிப்பறை பயன்படுத்தும் நிலை உள்ளதாகவும், இதனால் கொரோனா தொற்று ஏற்படுவதற்கான வாய்ப்பு இருப்பதாகவும் கூறினர்.
அண்ணா பல்கலைக்கழகத்துக்குகீழ் வரும் என்ஜினீயரிங் கல்லூரிகளில் நேற்று முதல் இளநிலை இறுதியாண்டு மாணவர்களுக்கான வகுப்புகள் தொடங்கப்பட்டன. இதில் சில என்ஜினீயரிங் கல்லூரிகள் நேற்றே வகுப்புகளை தொடங்கினாலும் சில கல்லூரிகளில் நேற்று வகுப்புகளை தொடங்காமல் ஓரிரு நாட்கள் அல்லது ஒரு வாரம் கழித்து வகுப்புகளை தொடங்க திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
Related Tags :
Next Story