செல்போன் கடையில் ஏ.சி. எந்திரத்துக்குள் புகுந்த 6 அடி நீள நல்ல பாம்பு; வனத்துறையினர் பிடித்து சென்றனர்
பூந்தமல்லியை அடுத்த சென்னீர்குப்பம் பகுதியில் ரஞ்சித்குமார் என்பவர் செல்போன் கடை நடத்தி வருகிறார். நேற்று காலை வழக்கம்போல் கடையை திறந்து வியாபாரம் செய்து கொண்டிருந்தார். அப்போது கடைக்குள் பொருத்தி இருந்த ஏ.சி. எந்திரத்துக்குள் இருந்து “புஷ்...புஷ்...” என சத்தம் கேட்டது.
அதன் அருகில் சென்று பார்த்தபோது பாம்பின் வால் வெளியே நீட்டியபடி இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தார். சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த வனத்துறையினர் ஏ.சி. எந்திரத்தை கழற்றி பார்த்தனர்.
அதில் ஏ.சி. எந்திரத்தின் உள்ளே சுமார் 6 அடி நீள நல்ல பாம்பு பதுங்கி இருப்பது தெரிந்தது. வனத்துறையினர் அதனை லாவகமாக பிடித்துச்சென்றனர். கடையின் உள்ளே உள்ள ஏ.சி. எந்திரத்துக்குள் நல்ல பாம்பு புகுந்தது எப்படி?. சுவரில் உள்ள துளை வழியாக வந்ததா?, அல்லது கடையில் ரஞ்சித்குமார் கவனிக்காத நேரத்தில் முன்புறம் வழியாக கடைக்குள் நுழைந்து ஏ.சி. எந்திரத்துக்குள் புகுந்ததா? என்பது தெரியவில்லை. இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story