திசையன்விளை பகுதியில் மழையின்றி வறண்ட குளங்கள்; மணிமுத்தாறு அணையில் இருந்து தண்ணீர் திறக்க கோரிக்கை


திசையன்விளை முதலாளிகுளம் தண்ணீரின்றி வறண்டு காணப்படுவதை படத்தில் காணலாம்
x
திசையன்விளை முதலாளிகுளம் தண்ணீரின்றி வறண்டு காணப்படுவதை படத்தில் காணலாம்
தினத்தந்தி 8 Dec 2020 5:20 AM IST (Updated: 8 Dec 2020 5:20 AM IST)
t-max-icont-min-icon

திசையன்விளை பகுதியில் மழையின்றி குளங்கள் வறண்டு காணப்படுகின்றன. மணிமுத்தாறு அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட வேண்டும் என்று பொதுமக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

வறண்ட குளங்கள்
நெல்லை மாவட்டத்தில் வேகமாக வளர்ச்சி அடைந்து வரும் நகரங்களில் திசையன்விளையும் ஒன்றாகும். வறட்சி மிகுந்த இப்பகுதியில் இந்த ஆண்டு போதிய பருவமழை பெய்யவில்லை. இதனால் அங்குள்ள சுவிசேஷபுரம் குளம், செங்குளம், முதலாளிகுளம், புலிமான்குளம், குருவிசுட்டான்குளம், ஆயன்குளம் படுகை, ஆனைகுடிகுளம் படுகை உள்ளிட்ட பிரதான குளங்கள் தண்ணீரின்றி வறண்டு காணப்படுகிறது. சில குளங்களில் சிறிதளவே தண்ணீர் தேங்கி உள்ளது.

திசையன்விளை பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் 550 அடிக்கும் கீழே அதலபாதாளத்துக்கு சென்று விட்டது. இதனால் பெரும்பாலான விவசாயிகள் விவசாயத்தை கைவிட்டனர். ஒரு சில விவசாயிகளே சொட்டுநீர் பாசனம் மூலம் முருங்கை பயிரிட்டுள்ளனர். இங்கு விளைவிக்கப்படும் முருங்கைக்காய்கள் தனிச்சுவையுடன் இருப்பதால், வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.

சென்னை, கோவை உள்ளிட்ட வெளியூர்களுக்கும், வெளிமாநிலங்களுக்கும் விற்பனைக்காக அனுப்பி வைக்கப்படுகிறது. திசையன்விளை பகுதியில் பருவமழை பொய்த்ததால், முருங்கை சாகுபடி செய்துள்ள விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். மேலும் இப்பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயமும் உள்ளது.

இதுகுறித்து திசையன்விளை பகுதி மக்கள் கூறியதாவது:-

தண்ணீர் திறந்து விட வேண்டும்
‘புரெவி’ புயலால் தென் மாவட்டங்களில் போதிய பருவமழை கிடைக்கும் என்று எதிர்பார்த்த நிலையில், அது திசைமாறி டெல்டா மாவட்டங்களில் கனமழையை தந்தது. திசையன்விளை பகுதியில் பருவமழை பொய்த்ததால் பெரும்பாலான குளங்களில் ஒரு சொட்டு தண்ணீர்கூட இல்லாமல் வறண்டு கிடக்கிறது.

தாமிரபரணி ஆற்றின் மூலம் பல்வேறு கால்வாய்களின் வழியாக குளங்களுக்கு தண்ணீர் வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் திசையன்விளை பகுதியில் உள்ள குளங்களுக்கு தண்ணீர் வழங்காததால், இங்குள்ள குளங்கள் வறண்டு கிடக்கிறது. மணிமுத்தாறு அணையின் 4-வது ரீச்சில் 10-வது மடையில் தண்ணீர் திறந்து விட்டால்தான், திசையன்விளை பகுதியில் அனைத்து குளங்களும் நிரம்பி, தேரிப்பகுதியில் உள்ள புத்தன்தருவைகுளத்துக்கும் தண்ணீர் செல்லும்.

அப்போதுதான் நிலத்தடி நீர்மட்டமும் உயரும். ஆனால் பல ஆண்டுகளாக இங்குள்ள குளங்கள் நிரம்பவில்லை. எனவே மணிமுத்தாறு அணையில் இருந்து திசையன்விளை பகுதியில் உள்ள குளங்களுக்கு தண்ணீர் திறந்து விட வேண்டும்.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

Next Story