திருநள்ளாறில், வருகிற 27-ந் தேதி சனிப்பெயர்ச்சி விழா: ஆன்லைனில் பதிவு செய்த பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி கலெக்டர் தகவல்


திருநள்ளாறில், வருகிற 27-ந் தேதி சனிப்பெயர்ச்சி விழா: ஆன்லைனில் பதிவு செய்த பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி கலெக்டர் தகவல்
x
தினத்தந்தி 8 Dec 2020 6:58 AM IST (Updated: 8 Dec 2020 6:58 AM IST)
t-max-icont-min-icon

திருநள்ளாறு சனீஸ்வரர் கோவிலில் வருகிற 27-ந் தேதி(ஞாயிற்றுக்கிழமை) நடைபெறும் சனிப் பெயர்ச்சி விழாவில் பங்கேற்க ஆன்லைனில் பதிவு செய்த பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும் என்று காரைக்கால் மாவட்ட கலெக்டர் அர்ஜூன் சர்மா கூறினார்.

காரைக்கால், 

திருநள்ளாறில் பிரசித்தி பெற்ற சனீஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் 2½ ஆண்டுகளுக்கு ஒரு முறை சனிப்பெயர்ச்சி விழா சிறப்பாக நடைபெறுவது வழக்கம். இந்த விழாவில் தமிழகம் மட்டுமின்றி இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சனீஸ்வரரை தரிசனம் செய்வது வழக்கம்.

இந்த ஆண்டுக்கான சனிப்பெயர்ச்சி விழா வருகிற 27-ந் தேதி(ஞாயிற்றுக்கிழமை) காலை 5.22 மணிக்கு நடக்கிறது. அன்று சனீஸ்வரர், தனுசு ராசியிலிருந்து மகர ராசிக்கு பெயர்ச்சி அடைகிறார்.

சனிப்பெயர்ச்சி விழாவுக்கு இன்னும் 19 நாட்களே உள்ளதால் திருநள்ளாறு சனீஸ்வரர் கோவிலில் முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன. இந்த பணிகளை கலெக்டர் அர்ஜூன்சர்மா, கோவில் நிர்வாக அதிகாரி ஆதர்ஷ் ஆகியோர் தலைமையில் அதிகாரிகள் கவனித்து வருகிறார்கள்.

இந்த நிலையில் திருநள்ளாறு சனீஸ்வரர் கோவில் விருந்தினர் மாளிகையில் சனிப்பெயர்ச்சி முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம் கலெக்டர் அர்ஜூன்சர்மா தலைமையில் நடந்தது. துணை கலெக்டர் ஆதர்ஷ், வடக்கு போலீஸ் சூப்பிரண்டு ரகுநாயகம் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

ஆன்லைனில் பதிவு செய்தவர்களுக்கே அனுமதி
கூட்டத்தில் கலெக்டர் அர்ஜூன்சர்மா நிருபர்களிடம் கூறியதாவது:-

திருநள்ளாறு சனிப் பெயர்ச்சி விழா கொரோனா விதிகளுக்கு உட்பட்டு வருகிற 27-ந் தேதி சமூக இடைவெளியோடு நடைபெறும். விழாவில் ஆன்லைனில் பதிவு செய்த பக்தர்களுக்கு மட்டும் அனுமதி வழங்கப்படும்.

ஆன்லைன் முகவரி www.thirunallarutemple.org ஆகும். ஆன்லைனில் முன் பதிவு செய்யாதவர்களுக்கு சனிப்பெயர்ச்சி அன்று கோவில் உள்ளே செல்ல அனுமதி கிடையாது. ஆன்லைன் பதிவு தொடங்கும் தேதி விரைவில் அறிவிக்கப்படும்.

இந்த நடைமுறை சனிப் பெயர்ச்சி விழா அன்றும், சனிப்பெயர்ச்சி விழாவுக்கு முந்தைய வார இறுதி நாட்களான(19, 20, 26-ந் தேதிகள்) மற்றும் சனிப்பெயர்ச்சிக்கு பிறகு வரும் 4 வார இறுதி நாட்களில்(ஜனவரி 2, 3, 9, 10, 16, 17, 23, 24-ந் தேதிகள்) நடைமுறையில் இருக்கும். சனிப் பெயர்ச்சி விழாவில் பங்கேற்க வரும் பக்தர்கள் அனைவரும் கண்டிப்பாக முககவசம் அணிந்திருக்க வேண்டும்.

உடல் வெப்பநிலையை பரிசோதனை செய்த பிறகே பக்தர்கள் கோவிலுக்குள் அனுமதிக்கப்படுவார்கள். கொரோனா அறிகுறி இருந்தால், உரிய சிகிச்சைக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள்.

சனிப்பெயர்ச்சியன்று கோவில் சார்பில் 3 இடங்களில் அன்னதானம் வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. நளன்குளத்தில் சனிப்பெயர்ச்சி நாளில் பக்தர்கள் புனித நீராடலாமா? வேண்டாமா? அல்லது வேறு மாற்று ஏற்பாடுகள் குறித்து உரிய ஆலோசனைக்கு பிறகு அறிவிக்கப்படும்.

வெளிமாவட்டங்களில் இருந்து பக்தர்கள் திருநள்ளாறுக்கு வந்து செல்ல தேவையான பஸ் வசதிகளை மாவட்ட நிர்வாகம் செய்து உள்ளது. மேலும், ரூ.1000 ரூ.600 மற்றும் ரூ.300 தனிநபர் விரைவு தரிசன டிக்கெட், சிறப்பு நுழைவு வாயில் வழியாக பக்தர்கள் விரைவாக தரிசனம் செய்யலாம். இந்த தரிசன டிக்கெட்டை இலவச கார், வாகன பாசாகவும் பயன்படுத்தி கொள்ளலாம். இவ்வாறு அவர் கூறினார்.

Next Story