38 மாத நிலுவை சம்பளத்தை வழங்க கோரி அமைச்சர் கந்தசாமியை ரேஷன் கடை ஊழியர்கள் முற்றுகை காரைக்காலில் திடீர் பரபரப்பு


38 மாத நிலுவை சம்பளத்தை வழங்க கோரி அமைச்சர் கந்தசாமியை ரேஷன் கடை ஊழியர்கள் முற்றுகை காரைக்காலில் திடீர் பரபரப்பு
x
தினத்தந்தி 8 Dec 2020 7:01 AM IST (Updated: 8 Dec 2020 7:01 AM IST)
t-max-icont-min-icon

காரைக்காலில் 38 மாத நிலுவை சம்பளத்தை வழங்க கோரி அமைச்சர் கந்தசாமியை ரேஷன்கடை ஊழியர்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

காரைக்கால், 

காரைக்கால் மாவட்டத்தில் 70 கூட்டுறவு ரேஷன் கடைகள் உள்ளன. இதில் 120 ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். கடந்த சில ஆண்டுகளாக ரேஷன் கடை மூலம் இலவச அரிசி வினியோகம் செய்வது நிறுத்தப்பட்டு, அதற்கு பதிலாக பயனாளிகளின் வங்கிக் கணக்கில் பணமாக வழங்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இதனால் ரேஷன் கடைகள் மூடப்பட்டதையடுத்து அதில் பணியாற்றிய ஊழியர்கள் வேலை, சம்பளம் இன்றி கடந்த 3 ஆண்டுகளாக தவித்து வருகின்றனர். இந்த நிலையில் அவர்கள் 38 மாத நிலுவை சம்பளம், ரேஷன் கடைகளை உடனே திறக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர்.

இந்தநிலையில், காரைக்கால் ஜெயப்பிரகாஷ் நாராயணன் அரசு நூற்பாலையை சிறப்பாக இயக்குவது குறித்து, அரசு அதிகாரிகள் மற்றும் தொழிலாளர்களிடம் பேச்சுவர்த்தை நடத்துவதற்காக கலெக்டர் அலுவலகத்துக்கு நேற்று மாலை அமைச்சர் கந்தசாமி வந்தார். அப்போது அம்பேத்கர் வீதியில் வந்த அவரது காரை 50க்கும் மேற்பட்ட ரேஷன் கடை ஊழியர்கள் மறித்து சாலையில் அமர்ந்தனர். இதனால் வேறுவழியின்றி அமைச்சர் கந்தசாமி காரைவிட்டு கீழே இறங்கினார். தொடர்ந்து, ஊழியர்கள் அமைச்சரை முற்றுகையிட்டனர்.

இதுபற்றி தகவல் அறிந்து கலெக்டர் அர்ஜூன்சர்மா அங்கு விரைந்து வந்தார். அமைச்சர் கந்தசாமி, ஊழியர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அதன்பின் ரேஷன் கடை ஊழியர்கள் மத்தியில் அமைச்சர் கந்தசாமி பேசியதாவது:-

ரேஷன் கடை ஊழியர்களை சேர்த்து 10 ஆயிரம் பேருக்கு சம்பளம் வழங்க முடியவில்லை. 9,500 அரசு பணியிடங்கள் காலியாக உள்ளன. இதற்காக கடந்த 4 ஆண்டுகளாக கவர்னர் கிரண்பெடியிடம் போராடி வருகிறோம். புதுச்சேரியில் அனைத்திற்கும் மேலானவர் நான் தான். எல்லா அதிகாரமும் தனக்கு தான் உள்ளது என கிரண்பெடி கூறிவருகிறார். மக்கள் குறித்து கவர்னருக்கு துளி கூட அக்கறை இல்லை. இது தொடர்பாக, முதல்-அமைச்சர், அமைச்சர்கள் பலமுறை, பல வழிகளில் கேட்டுவிட்டோம். அந்த அம்மா (கவர்னர்) அசைந்துகொடுக்க மறுக்கிறார். இன்னும் ஒரு வாரத்தில் கவர்னர் கிரண்பெடியை சந்தித்து பேசப்போகிறேன். சுமூகமான முடிவு வராவிட்டால், கவர்னரை கண்டித்து நான் போராடப்போகிறேன். இதற்காக அமைச்சர் பதவி போனால்கூட கவலையில்லை. விரைவில் உங்களுக்கு சம்பளம் வழங்க நடவடிக்கை எடுப்பேன். அல்லது காலி பணியிடங்களில் மாற்றுவேலை பெற்றுத்தர பாடுபடுவேன். இவ்வாறு அவர் கூறினார்.

அதன்பிறகும் கலெக்டர் அலுவலகம் சென்ற அமைச்சரை, ஊழியர்கள் விடாமல் துரத்தி கோஷங்கள் எழுப்பினர். அமைச்சர், கலெக்டரை போலீசார் பாதுகாப்பாக கலெக்டர் அலுவலகத்திற்கு அழைத்துச் சென்றனர். தொடர்ந்து, கலெக்டர் அலுவலகம் எதிரே ஊழியர்கள் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டதுடன் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங் கள் எழுப்பினர். இதனால் அங்கு அடுத்தடுத்து பர பரப்பு ஏற்பட்டது.

Next Story