விரைவில் காங்கிரஸ் அரசை வீட்டுக்கு அனுப்புவோம் பா.ஜ.க. மேலிட பொறுப்பாளர் உறுதி


விரைவில் காங்கிரஸ் அரசை வீட்டுக்கு அனுப்புவோம் பா.ஜ.க. மேலிட பொறுப்பாளர் உறுதி
x
தினத்தந்தி 8 Dec 2020 7:04 AM IST (Updated: 8 Dec 2020 7:04 AM IST)
t-max-icont-min-icon

புதுவை காங்கிரஸ் அரசை விரைவில் வீட்டுக்கு அனுப்புவோம் என்று பா.ஜ.க. மேலிட பொறுப்பாளர் நிர்மல் குமார் சுரானா கூறினார்.

புதுச்சேரி, 

தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாத காங்கிரஸ் அரசை கண்டித்தும், மத்தியிலும், மாநிலத்திலும் ஒரே ஆட்சி என்பதை வலியுறுத்தியும், சம்பளம் இல்லாமல் வாடும் அரசு சார்பு நிறுவன ஊழியர்களுக்கு ஆதரவாகவும் பா.ஜ.க. சார்பில் 72 மணி நேர தொடர் போராட்டம் கடந்த 4-ந்தேதி காலை 10 மணிக்கு புதுவையில் உள்ள அண்ணா சிலை அருகே தொடங்கியது.

இந்த போராட்டத்தில் கட்சியின் மாநில, மாவட்ட நிர்வாகிகள், கிளை நிர்வாகிகள் இரவு பகலாக சுழற்சி முறையில் கலந்து கொண்டு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். கொட்டும் மழையிலும் தொடர்ந்த இந்த போராட்டம் நேற்று காலை நிறைவடைந்தது.

போராட்டத்தை கட்சியின் மேலிட பொறுப்பாளர் நிர்மல்குமார் சுரானா முடித்து வைத்து பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-

நாட்டில் ராகுல்காந்தி எங்கெல்லாம் பிரசாரம் செய்கிறாரோ அங்கெல்லாம் பாரதீய ஜனதா வெற்றி பெறுவது நிச்சயம். சமீபத்தில் நடந்த பீகார் சட்டமன்ற தேர்தலும் இதை நிரூபித்துள்ளது.

புதுவையில் முதல்-அமைச்சர் நாராயணசாமி தலைமையிலான அரசில் மக்களுக்கான எந்தவித நலத்திட்டங்களும் நிறைவேற்றப்படவில்லை. மத்திய அரசின் திட்டங்களைக்கூட நிறைவேற்ற அவர்கள் தயாராக இல்லை. இந்த திட்டங்களால் காங்கிரசுக்கு கமிஷன் கிடைக்காது. இதனால்தான் அந்த திட்டங்களை செயல்படுத்தாமல் விட்டு விட்டனர்.

உலக நாடுகள் இப்போது எந்த பிரச்சினையானாலும் இந்தியா என்ன முடிவு எடுக்கப்போகிறது என்பதை உற்றுநோக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. அந்த அளவுக்கு இந்தியாவை மதிப்புமிகுந்த நாடாக மாற்றியுள்ளோம்.

கர்நாடகாவில் கடந்த 2004-ம் ஆண்டு பாரதீய ஜனதா ஆட்சியை பிடித்தபோது ஏற்பட்ட எழுச்சியை இப்போது புதுவையில் பார்க்கிறேன். இதன் மூலம் விரைவில் முதல்-அமைச்சர் நாராயணசாமியை வீட்டுக்கு அனுப்புவோம். அதற்கு வரும் சட்டமன்ற தேர்தலில் பாரதீய ஜனதா நிர்வாகிகள், தொண்டர்கள் கடுமையாக உழைக்கவேண்டும். இவ்வாறு நிர்மல்குமார் சுரானா பேசினார்.

போராட்டத்தில் பொதுச்செயலாளர்கள் ஏம்பலம் செல்வம், மோகன்குமார், துணைத்தலைவர்கள் செல்வம், தங்க.விக்ரமன், ரவிச்சந்திரன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Next Story