புதுச்சேரியில் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் கொட்டும் மழையில் மத்திய குழுவினர் ஆய்வு
புதுவையில் புயல் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை கொட்டும் மழையில் மத்திய குழுவினர் நேற்று ஆய்வு செய்தனர். அப்போது சேதமடைந்த பயிர்களுடன் வந்து இழப்பீடு கேட்டு விவசாயிகள் கண்ணீர் மல்க முறையிட்டனர்.
புதுச்சேரி,
வங்கக் கடலில் உருவான நிவர் புயல் கடந்த 25-ந் தேதி நள்ளிரவு மரக்காணம் அருகே கரையை கடந்தது.
அப்போது புதுவையில் ஒரே நாள் இரவில் 30 செ.மீ,. மழை பெய்தது. இதனால் ஏற்பட்ட சேதத்தின் சுவடு மறைவதற்குள் அடுத்ததாக புரெவி புயலால் பெய்த கனமழைக்கு தமிழகம், புதுச்சேரி மாநிலங்கள் கடும் பாதிப்புக்குள்ளாகின.
சென்னை, கடலூர், விழுப்புரம் உள்ளிட்ட வட மாவட்டங்களும், புதுச்சேரியும் வெள்ளக்காடானது. புதுவையில் மட்டும் 1,663 ஹெக்டேர் நெல், 387 ஹெக்டேர் கரும்புத் தோட்டம், 60 ஏக்கர் காய்கறி தோட்டம், 144 ஏக்கர் வாழைத் தோட்டம் ஆகியவை பாதிக்கப்பட்டன. மாநில அரசு சார்பில் ரூ.400 கோடி சேத மதிப்பீடு கணக்கிடப்பட்டது.
இதில் இடைக்கால நிவாரணமாக ரூ.100 கோடி வழங்க வேண்டும் என்று மத்திய அரசை முதல்-அமைச்சர் நாராயணசாமி வலியுறுத்தினார். இதுகுறித்து பிரதமர் மோடி, மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா ஆகியோருக்கும் கடிதம் எழுதினார்.
இந்தநிலையில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டு சேத மதிப்பை கணக்கிட மத்திய அரசு சார்பில் ஒரு குழு அமைக்கப்பட்டது. இந்த குழுவில் மத்திய உள்துறை இணைச்செயலர் அசுதோஷ் அக்னிகோத்ரி, மத்திய வேளாண்துறை இயக்குனர் மனோகரன், மீன்வளத்துறை ஆணையர் பால்பாண்டியன், சாலை போக்குவரத்துத் துறை மண்டல அலுவலர் ரணஞ்சய் சிங் ஆகியோர் இடம் பெற்று இருந்தனர்.
கடந்த 5-ந்தேதி சென்னை வந்த இவர்கள் 2 குழுக்களாக பிரிந்து சென்னை, செங்கல்பட்டு மாவட்டங்களில் ஆய்வு செய்தனர். அதன்பின் நேற்று முன்தினம் இரவு புதுச்சேரிக்கு வந்த அவர்கள் உள்ளாட்சி துறை அருகே உள்ள ஒரு தனியார் ஓட்டலில் தங்கினர்.
அங்கிருந்து நேற்று காலை 9 மணியளவில் புறப்பட்ட மத்திய குழுவினர் மறைமலை அடிகள் சாலை, வழுதாவூர் சாலை வழியாக பத்துக்கண்ணு சென்றனர். அவர்களுடன் மாநில வளர்ச்சி ஆணையர் அன்பரசு, மாவட்ட கலெக்டர் (பொறுப்பு) பூர்வா கார்க், சப்-கலெக்டர்கள் அஸ்வின் சந்துரு, சுதாகர், பொதுப் பணித்துறை தலைமைப் பொறியாளர் மகாலிங்கம், மீன்வளத்துறை இயக்குனர் முத்துமீனா, வேளாண்துறை இயக்குனர் பாலகாந்தி மற்றும் பல்வேறு துறை அதிகாரிகள் சென்றனர்.
பத்துக்கண்ணு பகுதியில் இறங்கி மழையால் சேதமடைந்த சாலைகளை பார்வையிட்டனர். தொடர்ந்து ராமநாதபுரத்தில் வாழைத்தோட்டங்கள், நெற்பயிர்கள், தோட்டத்தை பார்த்து ஆய்வு செய்தனர். அந்த பகுதி விவசாயிகளிடம் பாதிப்புகள் குறித்து மத்திய குழுவினர் கேட்டறிந்தனர். அப்போது அவர்களிடம், வயலில் மூழ்கி கிடந்த நெற்பயிர்கள், சூறாவளி காற்றில் சாய்ந்து விழுந்த வாழைத்தார்களை கொண்டு வந்து காண்பித்தனர். மேலும் புயல் மழையால் விவசாயம் பாதித்து வாழ்வாதாரத்தை இழந்து நிற்பதால் போதுமான இழப்பீடு வழங்க வேண்டும் என்று கண்ணீர் மல்க விவசாயிகள் முறையிட்டனர்.
அதை கேட்ட மத்திய குழுவினர் அங்கிருந்து சந்தை புதுக்குப்பம் பகுதிக்கு சென்றனர். அப்போது மழை பெய்யத் தொடங்கியது. அதை பொருட்படுத்தாமல் குடைகளை பிடித்தபடி சென்று அவர்கள் ஆய்வு செய்தனர். அங்கு வயல்களில் மூழ்கி கிடந்த நெற்பயிர்களை பார்த்து கணக்கெடுத்தனர். அவர்களிடம் அங்கிருந்த விவசாயிகள், அழுகி கிடந்த நெற்பயிர்களை எடுத்து கையில் வைத்து காண்பித்தனர். நடவு செய்துள்ள நெல் ரகம், நடவு செய்து எத்தனை நாட்கள் ஆனது என்பன போன்ற விவரங்களை அதிகாரிகள் கேட்டு தெரிந்து கொண்டனர்.
அங்கிருந்து சுதானா நகர் பகுதிக்கு சென்ற அவர்கள் காரில் மெதுவாக சென்றபடி பழுதடைந்த நகராட்சி சாலைகள் மற்றும் குடியிருப்புகளை பார்வையிட்டனர். தொடர்ந்து முதலியார்பேட்டை பகுதியில் சேதமான சாலைகளை பார்த்து விட்டு பகல் 11½ மணியளவில்தேங்காய்திட்டு மீன்பிடி துறைமுகத்திற்கு சென்றனர். அங்கு புயலால் கடலில் மூழ்கி சேதமடைந்த படகுகளை பார்வையிட்டனர்.
அப்போது அங்கிருந்த மீனவர்கள் புயல் காரணமாக 100-க்கும் மேற்பட்ட படகுகள் மற்றும் வலைகள் சேதமடைந்தன. கனமழை காரணமாக கடந்த சில நாட்களாக மீன்பிடி தொழிலுக்கு செல்லவில்லை. எனவே உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என மத்திய குழுவினரிடம் வேண்டுகோள் விடுத்தனர்.
அத்துடன் ஆய்வை முடித்துக் கொண்டு மத்திய குழுவினர் தலைமை செயலகத்திற்கு திரும்பினர். அங்குள்ள கருத்தரங்கு அறையில் தலைமை செயலாளர் அஸ்வனிகுமாருடன் ஆலோசனை நடத்தினர். அப்போது மத்திய குழுவிடம், புதுவை மாநிலத்தில் புயலால் ஏற்பட்ட சேதங்களை அதிகாரிகள் துறை வாரியாக வீடியோ, போட்டோக்கள் மூலம் விளக்கமளிக்கப்பட்டது.
இதன்பின் சட்டசபை வளாகத்தில் மத்திய குழுவினர் முதல்-அமைச்சர் நாராயணசாமியுடன் ஆலோசனை நடத்தினர். அமைச்சர்கள் நமச்சிவாயம், ஷாஜகான், கந்தசாமி ஆகியோர் உடனிருந்தனர்.
அப்போது, மாநிலத்தில் புயல் மழையால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள், அதனை தடுக்க அரசு மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்து நாராயண சாமியும், அமைச்சர்களும் விளக்கி கூறினர். புதுவை மாநிலத்திற்கு தேவையான நிதியை மத்திய அரசு ஒதுக்கித் தர உதவுமாறும் மத்திய குழுவினரிடம் கேட்டுக்கொண்டனர்.
அங்கிருந்து ராஜ்நிவாசுக்கு சென்று கவர்னர் கிரண்பெடியை மத்திய குழுவினர் சந்தித்து புயல் சேதங்கள் குறித்து ஆலோசனை நடத்தினர். பின்னர் ஓட்டலுக்கு திரும்பிய மத்திய குழுவினர் அங்கு மதிய உணவு சாப்பிட்டு விட்டு சுமார் 2 மணியளவில் கடலூருக்கு புறப்பட்டுச் சென்றனர்.
Related Tags :
Next Story