சேலம் மாநகராட்சியில் கொரோனா தடுப்பு நடவடிக்கை: 3¾ லட்சம் பேருக்கு மருத்துவ பரிசோதனை; ஆணையாளர் ரவிச்சந்திரன் தகவல்
சேலம் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையாக 7 ஆயிரத்து 30 காய்ச்சல் கண்டறியும் சிறப்பு மருத்துவ பரிசோதனை முகாம்களில், 3 லட்சத்து 85 ஆயிரத்து 138 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாக மாநகராட்சி ஆணையாளர் ரவிச்சந்திரன் தெரிவித்தார்.
மருத்துவ பரிசோதனை முகாம்
சூரமங்கலம் மண்டலத்தில் பாரதி நகர் மற்றும் பெரியார் நகர் பகுதிகளில் கொரோனா தொற்றை அறிந்திடும் வகையில், காய்ச்சல் கண்டறியும் சிறப்பு மருத்துவ பரிசோதனை முகாம்கள் நடைபெற்றன.
இந்த முகாம்களை சேலம் மாநகராட்சி ஆணையாளர் ரவிச்சந்திரன் நேற்று ஆய்வு செய்தார்.
பின்னர் அவர் கூறியதாவது:-
சேலம் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் கொரோனா தொற்று பரவுவதை முற்றிலுமாக தடுத்திடும் வகையில் மாநகராட்சி நிர்வாகத்தால் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன் ஒரு நடவடிக்கையாக மாநகரின் அனைத்து பகுதிகளிலும் மக்கள் வசிப்பிடத்திற்கே சென்று பொதுமக்களிடையே கொரோனா தொற்றை தடுக்க விழிப்புணர்வு பணிகள் மேற்கொள்வதுடன், காய்ச்சல் கண்டறியும் சிறப்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது.
3 லட்சத்து 85 ஆயிரம் பேர்
அதன்படி சேலம் மாநகர பகுதிகளில், நேற்று முன்தினம் வரை 7 ஆயிரத்து 30 காய்ச்சல் கண்டறியும் சிறப்பு மருத்துவ பரிசோதனை முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன. இதில் 3 லட்சத்து 85 ஆயிரத்து 138 பேருக்கு மருத்துவக்குழுவினரால் பரிசோதனைகள் மேற்கொண்டு தேவையான மருத்துவ சிகிச்சைகள் வழங்கப்பட்டுள்ளன.
கொரோனா தொற்று அறிகுறிகள் உள்ளவர்களுக்கு சளி பரிசோதனை எடுக்கப்பட்டு வருகிறது. தினமும் மாநகராட்சியின் குடியிருப்பு பகுதிகளில் 38 சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. மாநகரின் அனைத்து குடியிருப்பு பகுதிகளிலும், மேற்கொள்ளப்பட்டு வரும் இந்த சிறப்பு முகாம்களில், பொதுமக்கள் முழுமையாக கலந்து கொண்டு தங்களின் உடல்நிலையை பரிசோதித்து கொள்ளுமாறும், வீட்டில் இருந்து வெளியில் வரும் போது அனைவரும் கட்டாயம் முக கவசம் அணிவதோடு, முறையாக சமூக இடைவெளியை கடைபிடிக்குமாறும், அடிக்கடி கைகளை சோப்பு கொண்டு கழுவுமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த ஆய்வின் போது மருத்துவ அலுவலர்கள் ஜோசப், சவுமியா, சுகாதார ஆய்வாளர் பிரகாஷ் ஆகியோர் உடன் இருந்தனர்.
Related Tags :
Next Story