8 மாதங்களுக்கு பிறகு நீலகிரி மாவட்டத்தில் கல்லூரிகள் திறப்பு


8 மாதங்களுக்கு பிறகு நீலகிரி மாவட்டத்தில் கல்லூரிகள் திறப்பு
x
தினத்தந்தி 8 Dec 2020 9:42 AM IST (Updated: 8 Dec 2020 9:42 AM IST)
t-max-icont-min-icon

நீலகிரி மாவட்டத்தில் 8 மாதங்களுக்கு பிறகு கல்லூரிகள் திறக்கப்பட்டது. காய்ச்சல் பரிசோதனைக்கு பிறகு மாணவர்கள் அனுமதிக்கப்பட்டனர்.

ஊட்டி,

கொரோனா பரவல் காரணமாக தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் 25-ந் தேதி முதல் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. மேலும் அரசு கல்லூரிகள் உள்பட அனைத்து கல்லூரிகளும் மூடப்பட்டன. எனினும் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தது. இதற்கிடையே ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு கல்லூரிகளில் இளநிலை இறுதியாண்டு மாணவர்களுக்கு வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி வகுப்புகளை தொடங்க அனுமதிக்கப்பட்டது.

அதன்படி நீலகிரி மாவட்டத்தில் 8 மாதங்களுக்கு பிறகு கல்லூரிகள் திறக்கப்பட்டன. ஊட்டி அரசு கலைக்கல்லூரியில் நேற்று முதல் இளநிலை இறுதியாண்டு வகுப்புகள் தொடங்கப்பட்டது. ஊட்டி நகரில் நேற்று காலை முதலே மழை பெய்து கொண்டு இருந்ததால் மாணவர்கள் குடைகளை பிடித்தபடி கல்லூரிக்கு வந்தனர். அவர்களுக்கு காய்ச்சல் உள்ளதா? என்று தெர்மல் ஸ்கேனர் மூலம் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. மேலும் கிருமி நாசினி கொண்டு கைகளை சுத்தப்படுத்த வசதி ஏற்படுத்தப்பட்டு இருந்தது. உதவி பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள் மாணவர்களுக்கு பாடங்களை கற்பித்தனர்.

காய்ச்சல் பரிசோதனை

முன்னதாக அவர்கள் சமூக இடைவெளி விட்டு இருக்கைகளில் அமர வைக்கப்பட்டனர். தொடர்ந்து கல்லூரி முதல்வர் ஈஸ்வரமூர்த்தி வகுப்பறைகளுக்கு நேரில் சென்று பார்வையிட்டார். அப்போது சமூக இடைவெளி விட்டு அமரவும், கட்டாயம் முககவசம் அணியவும் மாணவர்களை அறிவுறுத்தினார். இடைவேளை மற்றும் சாப்பிடும் நேரங்களில் மாணவர்கள் கூடுவதை தவிர்க்கவும், அடிக்கடி கைகளை சுத்தம் செய்ய சிறிய பாட்டில்களில் கிருமிநாசினி வைத்துக்கொள்ளவும் அறிவுரைகளை வழங்கினார்.

கூடலூர் அரசு கல்லூரியில் சுமார் 1,500 மாணவர்கள் படித்து வருகின்றனர். நேற்று கல்லூரி திறக்கப்பட்டதால், காலை 9 மணிக்கு மாணவர்கள் மிக ஆர்வமுடன் கல்லூரிக்கு வந்தனர். அப்போது கல்லூரி நுழைவு வாயிலில் கைகளை சுத்தப்படுத்த கிருமி நாசினி வழங்கப்பட்டது. பின்னர் தெர்மல் ஸ்கேனர் மூலம் காய்ச்சல் பரிசோதனை செய்யப்பட்டது. இளங்கலை பட்டப்படிப்பு படிக்கும் மாணவர்கள் 71 சதவீதத்தினரும், முதுகலை பிரிவுகளில் படிக்கும் மாணவர்கள் 76 சதவீதத்தினரும் கல்லூரிக்கு வந்திருந்தனர். இதைத்தொடர்ந்து அனைத்து வகுப்புகளிலும் பாடங்கள் நடத்தப்பட்டது.

செமஸ்டர் தேர்வுக்கு தயார்

இதுகுறித்து மாணவர்கள் கூறியதாவது:-

கல்லூரி மூடப்பட்டதால் வீட்டில் இருந்தபடியே பாடங்களை படிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. நீலகிரி மலைப்பிரதேசம் என்பதால் சில பகுதிகளில் இணையதள வசதி கிடைப்பது இல்லை. இதனால் தொடர்ந்து படிப்பதில் சிக்கல் நிலவியது. அதன் காரணமாக தேர்வை எதிர்கொள்ள மனதில் பயம் இருந்தது. இதற்கிடையே இளநிலை இறுதியாண்டு வகுப்புகள் தொடங்கப்பட்டு உள்ளன. வருகிற நாட்களில் நடைபெற உள்ள செமஸ்டர் தேர்வுக்கு எங்களை தயார்படுத்தி வருகிறோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.இதேபோல் ஊட்டி, குன்னூரில் உள்ள தனியார் கல்லூரிகளும் திறக்கப்பட்டன. ஏற்கனவே முதுநிலை இறுதியாண்டு மற்றும் ஆராய்ச்சி படிப்புக்கான வகுப்புகள் தொடங்கப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.

Next Story