நீலகிரி மாவட்டத்தில் அனைத்து சுற்றுலா தலங்களும் திறப்பு படகு இல்லத்தில் குவிந்த சுற்றுலா பயணிகள்


நீலகிரி மாவட்டத்தில் அனைத்து சுற்றுலா தலங்களும் திறப்பு படகு இல்லத்தில் குவிந்த சுற்றுலா பயணிகள்
x
தினத்தந்தி 8 Dec 2020 9:45 AM IST (Updated: 8 Dec 2020 9:45 AM IST)
t-max-icont-min-icon

நீலகிரி மாவட்டத்தில் அனைத்து சுற்றுலா தலங்களும் திறக்கப்பட்டது. படகு இல்லத்தில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.

ஊட்டி,

கொரோனா பரவல் காரணமாக நீலகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து சுற்றுலா தலங்களும் கடந்த மார்ச் மாதம் 17-ந் தேதி முதல் மூடப்பட்டது. இதற்கிடையில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு கடந்த செப்டம்பர் மாதம் முதல் தோட்டக்கலை பூங்காக்கள் மட்டும் திறக்கப்பட்டது. பின்னர் ஊரடங்கு கட்டுப்பாடுகளை மேலும் தளர்த்தி வழிகாட்டு நெறிமுறைகளுடன் அனைத்து சுற்றுலா தலங்களையும் திறக்க தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அனுமதித்தார்.

அதன்படி நீலகிரி மாவட்டத்தில் அனைத்து சுற்றுலா தலங்களும் 266 நாட்களுக்கு பிறகு நேற்று முதல் திறக்கப்பட்டன. இதனால் அதை நம்பி பிழைப்பு நடத்தி வந்தவர்கள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர். தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகத்தின் கீழ் இயங்கும் ஊட்டி படகு இல்லம், தொட்டபெட்டா மலைச்சிகரம், பைக்காரா படகு இல்லம் மற்றும் வனத்துறையின் சூழல் மேம்பாட்டு குழுவின் கீழ் செயல்பட்டு வரும் பைன்பாரஸ்ட், சூட்டிங்மட்டம், கோடநாடு காட்சி முனை, கேர்ன்ஹில் வனப்பகுதி உள்ளிட்ட சுற்றுலா தலங்கள் திறக்கப்பட்டது.

சாரல் மழை

கடல் மட்டத்தில் இருந்து 2 ஆயிரத்து 636 மீட்டர் உயரத்தில் உள்ள தொட்டபெட்டா மலைச்சிகரத்தில் கடும் பனிமூட்டம் நிலவியதோடு, சாரல் மழை பெய்து கொண்டே இருந்தது. சில சுற்றுலா பயணிகள் மழையில் நனைந்தபடியும், சில சுற்றுலா பயணிகள் மழையில் நனையாமல் இருக்க குடைகளை பிடித்தபடியும் இயற்கை காட்சிகளை கண்டு ரசித்தனர். எனினும் பனிமூட்டம் காரணமாக தொலைநோக்கி வழியாக ஊட்டி நகரம், ஏரி, கேத்தி பள்ளதாக்கு போன்றவைகளை பார்க்க முடியாமல் ஏமாற்றம் அடைந்தனர்.

ஊட்டி படகு இல்லத்தில் சுற்றுலா பயணிகள் தங்களது குழந்தைகள் மற்றும் குடும்பத்தினருடன் மிதி படகு, மோட்டார் படகு, துடுப்பு படகுகளில் சவாரி செய்து மகிழ்ந்தனர். அவர்கள் ஏரியின் இயற்கை அழகை கண்டு ரசித்து, சீதோஷ்ண காலநிலையை அனுபவித்தனர்.

கூட்டம் அலைமோதியது

முதல் நாளிலேயே படகு இல்லத்தில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியது. மோட்டார் படகுகளில் சவாரி செய்ய சுற்றுலா பயணிகள் டிக்கெட் எடுத்து நீண்ட வரிசையில் காத்திருந்தனர். அவர்கள் உயிர் பாதுகாப்பு கவச உடை அணிந்த பின்னரே சவாரிக்கு அனுமதிக்கப்பட்டனர். இதேபோல் பைன்பாரஸ்ட், சூட்டிங்மட்டம் சுற்றுலா தலங்களிலும் சுற்றுலா பயணிகள் வருகை காணப்பட்டது. அவர்களுக்கு காய்ச்சல் உள்ளதா? என்று தெர்மல் ஸ்கேனர் பரிசோதனை செய்யப்பட்டது. கிருமிநாசினி கொண்டு கைகளை சுத்தப்படுத்த ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

ஒத்துழைக்க வேண்டும்

இந்த நிலையில் தொட்டபெட்டா மலைச்சிகரத்துக்கு கலெக்டர் இன்னசென்ட் திவ்யா நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அங்கு சுற்றுலா பயணிகள் சமூக இடைவெளியை கடைபிடிக்கவும், கட்டாயம் முகக்கவசம் அணியவும் அறிவுறுத்தினார். தொடர்ந்து அவர் நிருபர்களிடம் கூறும்போது, நீலகிரியில் இன்று (அதாவது நேற்று) முதல் வனத்துறையின் சூழல் மேம்பாட்டு குழுவின் கீழ் இயங்கும் 9 சுற்றுலா தலங்கள், தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகத்தின் கீழ் இயங்கும் தொட்டபெட்டா மலைச்சிகரம், படகு இல்லங்கள் சுற்றுலா பயணிகளின் பயன்பாட்டுக்காக திறக்கப்பட்டு உள்ளது. இங்கு கடைகள் திறக்கப்படவில்லை. அதற்கான முன்னேற்பாடுகள் செய்யப்பட்ட பிறகு திறக்கப்படும். சுற்றுலா பயணிகள் புகைப்படம் எடுத்த பிறகு முகக்கவசத்தை கட்டாயம் அணிய வேண்டும். உள்ளூர் மக்கள் ஒத்துழைப்பதைபோல் சுற்றுலா பயணிகளும் மாவட்ட நிர்வாகத்திற்கு ஒத்துழைக்க வேண்டும் என்றார்.

Next Story