ரூ.15 கோடி செல்போன் கொள்ளை வழக்கில் துபாயை சேர்ந்த சர்வதேச குற்றவாளிகளை பிடிக்க நடவடிக்கை; போலீஸ் சூப்பிரண்டு தகவல்
ரூ.15 கோடி மதிப்பிலான செல்போன் கொள்ளை வழக்கில் துபாயை சேர்ந்த சர்வதேச குற்றவாளிகளை பிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக போலீஸ் சூப்பிரண்டு பண்டி கங்காதர் கூறினார்.
கிருஷ்ணகிரியில் அவர் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
செல்போன்கள் கொள்ளை
காஞ்சீபுரம் மாவட்டத்தில் இருந்து 15 பெட்டிகளில் 13 ஆயிரத்து 920 செல்போன்களை ஏற்றிக் கொண்டு ஒரு கன்டெய்னர் லாரி மும்பை நோக்கி கடந்த அக்டோபர் மாதம் 21-ந் தேதி சென்று கொண்டிருந்தது. கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகே லாரி சென்ற போது மற்றொரு லாரியில் வந்த மர்ம நபர்கள் 8 பேர் செல்போன் ஏற்றி சென்ற லாரியை வழிமறித்து டிரைவர்கள் சதீஷ்குமார் ஷா, அருண் ஆகிய 2 பேரையும் தாக்கி விட்டு ரூ.15 கோடி மதிப்பிலான செல்போன்களை கொள்ளையடித்து சென்றனர். இதுதொடர்பாக சூளகிரி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
இது தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில் இந்த கொள்ளையில் மத்திய பிரதேச மாநிலத்தை சேர்ந்த கும்பலுக்கு தொடர்பு இருப்பது தெரிய வந்தது. அந்த நபர்கள் இதேபோல கடந்த ஆகஸ்டு மாதம் ஆந்திர மாநிலம் நகரி காவல் நிலைய எல்லையில் ஒரு செல்போன் கொள்ளை சம்பவத்தை நடத்தி உள்ளனர்.
குற்றவாளிகள்
இந்த கொள்ளையர்களை பிடிக்க கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு சக்திவேல், துணை போலீஸ் சூப்பிரண்டுகள் சங்கர் (மது விலக்கு அமல் பிரிவு) முரளி (ஓசூர்) மற்றும் 7 இன்ஸ்பெக்டர்கள், 6 சப்-இன்ஸ்பெக்டர்கள் உள்பட மொத்தம் 30 பேர் கொண்ட போலீஸ் தனிப்படை அமைக்கப்பட்டது. அவர்கள் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தினர்.
அதில் மத்திய பிரதேசம் மற்றும் ராஜஸ்தான் மாநில பதிவெண் கொண்ட 2 லாரிகளில் அந்த கும்பல் வந்தது தெரிய வந்தது. அந்த கொள்ளை கும்பல் பல இடங்களில் லாரிகளின் பதிவு எண்களை மாற்றி அந்த செல்போன்களை மத்திய பிரதேச மாநிலத்திற்கு கொண்டு சென்றுள்ளனர். மொத்தம் 33 இடங்களில் பதிவான வீடியோ பதிவுகளை வைத்து குற்றவாளிகள் அடையாளம் காணப்பட்டது.
வங்கதேசம் கொண்டு சென்றனர்
அதில் மத்திய பிரதேச மாநிலம் தேவாஸ் மாவட்டத்தைச் சேர்ந்த ராஜேந்திரா என்பவன் தலைமையில் 18 பேர் கொண்ட கும்பல் இந்த கொள்ளையில் ஈடுபட்டது தெரிய வந்தது. இவர்கள் செல்போன்களை மத்திய பிரதேசம் கொண்டு சென்று அங்கிருந்து பல வகைகளாக பிரித்து, துபாயை சேர்ந்த அப்பாஸ் என்பவருக்கு கொடுத்துள்ளனர். இதற்காக இந்த கொள்ளை கும்பலுக்கு ரூ.6 கோடியே 50 லட்சம் ஹவாலா பணம் கைமாறி உள்ளது.
மத்திய பிரதேச மாநிலம் இன்டூர் நகரம் அமிர்கான், பரத் அஸ்வானி, பரத் தேஜ்வாணி உள்ளிட்டோர் செல்போன்களை அனுப்ப உதவி உள்ளனர். டெல்லி, கொல்கத்தா, மும்பை, கவுகாத்தி, ராய்ப்பூர் வழியாக பல பார்சல்களாக இந்த செல்போன்களை பிரித்து திரிபுராவுக்கு அனுப்பி உள்ளனர். அங்கிருந்து அதை வங்க தேச நாட்டின் டாக்கா கொண்டு சென்றுள்ளனர்.
10 பேர் கைது
இந்த வழக்கில் மத்தியபிரதேச மாநிலம் இன்டூர் பரத் தேஜ்வாணி (37), திரிபுரா அமித்தா டாடா (39), ஷாஜகான் மியா (31), முகமது ஜாகித் (26), மத்தியபிரதேச மாநிலம் தேவாஸ் மாவட்டம் ராஜேந்திர சவுகான் (45), பவானி சிங் ஹடா (35), கமல்சிங் ஹடா (60), ஹேம்ராஜ் ஜாலா (24), இன்டூர் அமீர் என்கிற அமீர்கான் (29), பரத் அஸ்வானி (36) ஆகிய 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 4 லாரிகள்
பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
இந்த கொள்ளை வழக்கில் ராஜேந்திர சவுகான் தான் மூளையாக செயல்பட்டுள்ளான். இவன் மீது அந்த மாநிலத்தில் ஏராளமான வழக்குகள் உள்ளன. இந்த வழக்கில் தொடர்புடைய சர்வதேச குற்றவாளிகள் சிலர் துபாயில் உள்ளனர். அவர்களையும் பிடிக்க உரிய நடவடிக்கை எடுத்து வருகிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
அப்போது கூடுதல் சூப்பிரண்டு சக்திவேல், துணை போலீஸ் சூப்பிரண்டு சங்கர் மற்றும் போலீசார் உடன் இருந்தனர். தொடர்ந்து கொள்ளையர்களை பிடித்த தனிப்படை போலீசாரை போலீஸ் சூப்பிரண்டு பண்டி கங்காதர் பாராட்டி வெகுமதி வழங்கினார்.
Related Tags :
Next Story