8 மாதங்களுக்கு பிறகு கல்லூரிகள் திறப்பு இறுதி ஆண்டு மாணவ-மாணவிகள் வகுப்புகளுக்கு வருகை


8 மாதங்களுக்கு பிறகு கல்லூரிகள் திறப்பு இறுதி ஆண்டு மாணவ-மாணவிகள் வகுப்புகளுக்கு வருகை
x
தினத்தந்தி 8 Dec 2020 5:06 AM GMT (Updated: 8 Dec 2020 5:06 AM GMT)

8 மாதங்களுக்கு பிறகு கோவையில் கல்லூரிகள் திறக்கப்பட்டன. இறுதி ஆண்டு மாணவ-மாணவிகள் வகுப்புகளுக்கு வந்தனர்.

கோவை,

கொரோனா காரணமாக கடந்த மார்ச் மாதம் 24-ந் தேதி முதல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதால் கோவையில் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டன. தற்போது கொரோனா பாதிப்பு குறைந்து வருவதால், கடந்த 2-ந் தேதி முதல் முதுநிலை ஆராய்ச்சி படிப்பு மாணவர்களுக்கு கல்லூரிகள் திறக்கப்பட்டன.

அதன் தொடர்ச்சியாக கலை, அறிவியல் கல்லூரி, தொழில்நுட்பம், என்ஜினீயரிங், வேளாண்மை மற்றும் கால்நடை மருத்துவ கல்லூரிகளில் இறுதி ஆண்டு மாணவர்களுக்கு வகுப்புகள் 7-ந் தேதி முதல் தொடங்கலாம் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி நேற்று 8 மாதங்களுக்கு பிறகு நேற்று கோவையில் உள்ள அரசு கலைக்கல்லூரி, அரசு மருத்துவக்கல்லூரி மற்றும் தனியார் கல்லூரிகள் திறக்கப்பட்டன.

பூங்கொத்து கொடுத்து வரவேற்பு

கோவை அரசு கலைக்கல்லூரியில் 8 மாதங்களுக்கு பிறகு வந்த மாணவ-மாணவிகளை பேராசிரியர்கள் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர். முன்னதாக அனைத்து மாணவ-மாணவிகளின் உடல் வெப்பநிலை தெர்மல் ஸ்கேனர் மூலம் பரிசோதனை செய்யப்பட்டது. அத்துடன் வகுப்பறையில் மாணவ-மாணவிகள் முகக்கவசம் அணிந்ததுடன், சமூக இடைவெளியை கடைபிடித்து அமர வைக்கப்பட்டனர். நீண்ட நாட்களுக்கு பிறகு கல்லூரிகள் திறக்கப்பட்டதால், வீடுகளில் முடங்கி கிடந்த மாணவர்கள் தங்கள் அனுபவங்களை ஒருவருக்கு ஒருவர் பகிர்ந்து கொண்டனர். கோவையில் உள்ள அரசு மருத்துவ கல்லூரியிலும் நேற்று இறுதி ஆண்டு மாணவர்களுக்கு வகுப்பு தொடங்கியது. கொரோனா பரிசோதனை செய்து நெகட்டிவ் என்று சான்றிதழ் கிடைத்த மாணவர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர். இதுகுறித்து கோவை அரசு கலைக்கல்லூரி முதல்வர் கே.சித்ரா கூறியதாவது:-

700 மாணவர்கள் பங்கேற்பு

கோவை அரசு கலைக்கல்லூரியில் இளநிலை மற்றும் முதுநிலை இறுதி ஆண்டு படிக்கும் மாணவ-மாணவிகள் 1, 400 பேர். அவர்களில் இளநிலை படிப்பில் 40 சதவீதம் பேரும், முதுநிலையில் 60 சதவீதம் பேரும் என 700 மாணவர்கள் கல்லூரிக்கு வந்து இருந்தனர். கல்லூரி நுழைவுவாயிலின் முன்பு அனைத்து மாணவ-மாணவிகளின் கைகளில் கிருமிநாசினி திரவம் தெளிக்கப்பட்டு, உடல் வெப்பநிலை சரிபார்த்த பிறகு அனுமதிக்கப்படுகிறார்கள்.அத்துடன் வகுப்பறையில் சமூக இடைவெளியை கடைப்பிடித்து அமரும் வகையில் இருக்கை வசதி செய்யப்பட்டு உள்ளது. இதுதவிர கொரோனா தடுப்பு பணியில் ஈடுபடுவதற்காக பேராசிரியர்கள் கொண்ட சிறப்புகுழு அமைக்கப்பட்டு உள்ளது. அவர்கள் மாணவ-மாணவிகளுக்கு கொரோனா குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதுடன், அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடிக்க வலியுறுத்துவார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story