ஈரோட்டில் கல்லூரிகள் திறப்பு நண்பர்கள்-தோழிகளை பார்த்து உற்சாகமான மாணவ-மாணவிகள்


ஈரோட்டில் கல்லூரிகள் திறப்பு நண்பர்கள்-தோழிகளை பார்த்து உற்சாகமான மாணவ-மாணவிகள்
x
தினத்தந்தி 8 Dec 2020 11:40 AM IST (Updated: 8 Dec 2020 11:40 AM IST)
t-max-icont-min-icon

ஈரோட்டில் கல்லூரிகள் திறந்ததால் நேற்று வகுப்புகளுக்கு வந்த மாணவ-மாணவிகள் நண்பர்கள்- தோழிகளை பார்த்து உற்சாகம் அடைந்தனர்.

ஈரோடு,

கொரோனா ஊரடங்கு காரணமாக தமிழகத்தில் பள்ளி-கல்லூரிகள் அனைத்தும் அடைக்கப்பட்டன. கடந்த மார்ச் மாதம் அடைக்கப்பட்ட பள்ளி-கல்லூரிகள் முழுமையாக இதுவரை திறக்கப்படவில்லை. கடந்த ஜூன் மாதம் முதல் பள்ளி-கல்லூரிகளுக்கு ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதனால் மாணவ-மாணவிகள் வீடுகளுக்குள்ளேயே அடைந்து கிடக்கும் நிலையில் இருந்தனர். தற்போது கொரோனா தாக்கம் சற்று குறைந்து உள்ள நிலையில் கல்லூரிகளை திறக்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்து உள்ளது.

அதன்படி இறுதி ஆண்டு பட்டப்படிப்பு வகுப்புகளை திறக்கலாம் என்று அனுமதிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து நேற்று கல்லூரிகள் திறக்கப்பட்டன. ஈரோடு மாவட்டத்திலும் கலை அறிவியல் கல்லூரிகள், என்ஜினீயரிங் கல்லூரிகள் நேற்று திறக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், என்ஜினீயரிங் கல்லூரிகளில் ஆன்லைன் வகுப்புகளை தொடரலாம் என்று அண்ணா பல்கலைக்கழகம் அனுமதி அளித்ததால், நேற்று என்ஜினீயரிங் கல்லூரிகள் திறக்கப்படவில்லை.

கல்லூரிகள் திறப்பு

கலை அறிவியல் கல்லூரிகளில் அரசின் நிதி உதவி பெறும் கல்லூரிகள் நேற்று திறந்தன. தனியார் சுய நிதி கல்லூரிகள் ஒரு சில மட்டுமே திறக்கப்பட்டன. நீண்ட இடைவெளிக்கு பின்னர் கல்லூரிகள் திறக்கப்பட்டாலும் மாணவ-மாணவிகள் குறைந்த அளவே கல்லூரிகளுக்கு வந்தனர்.

அவர்களுக்கு கல்லூரி நுழைவு வாயிலிலேயே உடல் வெப்ப பரிசோதனை செய்யப்பட்டது. அனைவருக்கும் சானிடைசர் வழங்கப்பட்டு கைகள் சுத்தம் செய்யப்பட்ட பிறகே உள்ளே அனுமதிக்கப்பட்டனர். அனைவரும் முகக்கவசம் அணியவும் அறிவுறுத்தப்பட்டனர்.

உற்சாகம்

நீண்ட நாட்களுக்கு பின்னர் நண்பர்கள், தோழிகளை பார்த்த மாணவ-மாணவிகள் ஓடிச்சென்று கட்டிப்பிடிக்கலாமா?, கைகள் குலுக்கலாமா? என்று சற்று நேரம் தயங்கினர். சிறிது நேரத்தில் வழக்கம்போல தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்கள். பின்னர் உற்சாக மனநிலைக்கு வந்தனர். இதுபோல் வகுப்பறைகளிலும் போதிய இடைவெளியுடன் மாணவ-மாணவிகள் உட்கார வைக்கப்பட்டனர்.

Next Story