திருவண்ணாமலையில் நடைபெற உள்ள ராணுவத்துக்கு ஆள்சேர்ப்பு முகாம் குறித்த ஆய்வுக்கூட்டம்; கலெக்டர் தலைமையில் நடந்தது


ராணுவத்துக்கு ஆள்சேர்ப்பு முகாம் குறித்த ஆய்வுக்கூட்டம் கலெக்டர் சந்தீப் நந்தூரி தலைமையில் நடந்த போது
x
ராணுவத்துக்கு ஆள்சேர்ப்பு முகாம் குறித்த ஆய்வுக்கூட்டம் கலெக்டர் சந்தீப் நந்தூரி தலைமையில் நடந்த போது

திருவண்ணாமலையில் நடைபெற உள்ள ராணுவத்துக்கு ஆள்சேர்ப்பு முகாம் குறித்த ஆய்வுக்கூட்டம் கலெக்டர் சந்தீப் நந்தூரி தலைமையில் நடந்தது.

ராணுவத்துக்கு ஆள்சேர்ப்பு முகாம்
திருவண்ணாமலை அருணை பொறியியல் கல்லூரி விளையாட்டு மைதானத்தில் சென்னை மண்டல ராணுவ தலைமை அலுவலகம் மற்றும் திருவண்ணாமலை மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக வருகிற பிப்ரவரி மாதம் 10-ந்தேதி முதல் 26-ந்தேதி வரை ராணுவத்துக்கு ஆள்சேர்ப்பு முகாம் நடைபெற உள்ளது.

முகாமில், தமிழகத்தில் உள்ள சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சீபுரம், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர் ஆகிய 11 மாவட்டங்களில் இருந்தும் மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் இருந்தும் ஏற்கனவே ராணுவத்துக்கு ஆள்சேர்ப்பு முகாமிற்கு ஆன்லைனில் விண்ணப்பித்து உள்ள இளைஞர்கள் மட்டும் கலந்துகொள்ள அனுமதி அளிக்கப்படுவார்கள். ஆன்லைன் மூலம் 25 ஆயிரம் இளைஞர்கள் ராணுவத்தில் சேருவதற்கு விண்ணப்பித்து உள்ளார்கள். ராணுவ ஆள்சேர்ப்பு முகாமில் கலந்துகொள்வதற்கு தினமும் 2 ஆயிரம் இளைஞர்கள் பங்கேற்க அனுமதி அளிக்கப்பட உள்ளது.

ஆய்வுக்கூட்டம்
திருவண்ணாமலையில் நடைபெற உள்ள ராணுவ ஆள்சேர்ப்பு முகாமில் பல்வேறு துறைகள் மூலம் மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் நேற்று மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள கூட்டரங்கில் கலெக்டர் சந்தீப் நந்தூரி தலைமையில் நடைபெற்றது.

இதில் காவல்துறை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை, சுகாதாரத்துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறை, வருவாய்த் துறை, விளையாட்டுத்துறை, தமிழ்நாடு மின்சார வாரியம், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகம், போக்குவரத்துத்துறை, மகளிர் திட்டம், பொதுப்பணித்துறை ஆகிய துறை அலுவலர்கள் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து விரிவாக எடுத்துரைக்கப்பட்டது.

கூட்டத்தில் சென்னை ராணுவ ஆள்சேர்ப்பு அலுவலக இயக்குநர் கர்னல் கவுரவ் சேத்தி, மாவட்ட வருவாய் அலுவலர் ரத்தினசாமி, கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு வனிதா, முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குநர் முன்னாள் கேப்டன் விஜயகுமார் மற்றும் அனைத்து துறை அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

Next Story