மாடியில் இருந்து விழுந்ததில் தோள்பட்டையில் கம்பி புகுந்தது: தொழிலாளிக்கு ½ மணி நேரத்தில் அறுவை சிகிச்சை செய்த அரசு டாக்டர்கள் - சுகாதாரத்துறை செயலாளர் பாராட்டு
சென்னை மாங்காடு பகுதியில் மாடியில் இருந்து கீழே விழுந்ததில் கட்டிடத்தொழிலாளியின் தோள்பட்டையில் கம்பி புகுந்தது. அவருக்கு ½ மணி நேரத்தில் சிகிச்சை அளித்து காப்பாற்றிய அரசு டாக்டர்களை சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் நேரில் சென்று பாராட்டினார்.
சென்னை,
சென்னையை அடுத்த மாங்காடு பாலாஜி நகரை சேர்ந்தவர் புவனேஷ்குமார் (வயது 26). கட்டிடத்தொழிலாளியான இவர் நேற்று முன்தினம் காலை வழக்கம் போல் அதேப்பகுதியில் கட்டிட வேலைக்கு சென்றார். அப்போது, அந்த கட்டிடத்தின் முதல் மாடியில் ‘பலகை’ அடித்து கொண்டிருந்தார்.
இந்தநிலையில் திடீரென நிலைத்தடுமாறி, முதல் மாடியின் 15 அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்தார். அப்போது துரதிருஷ்டவசமாக கீழே கிடந்த கம்பி மீது அவர் விழுந்தார். இதில் அவரது இடது தோள்பட்டையின் முன் பகுதியில் கம்பி குத்தி, முதுகு வழியே வெளியே வந்தது. வலியால் அலறி துடித்த அவரை, அங்கிருந்தவர்கள் மீட்டு, 108 ஆம்புலன்ஸ் மூலம் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு மதியம் 1 மணி அளவில் அவர் அனுப்பி வைக்கப்பட்டார். இதையடுத்து அவரை பரிசோதித்த டாக்டர்கள், உடனடியாக அவருக்கு அறுவை சிகிச்சை செய்ய முடிவெடுத்தனர்.
அடுத்த ½ மணி நேரத்தில், மருத்துவமனை டீன் டாக்டர் தேரணிராஜன் மேற்பார்வையில், அறுவைச்சிகிச்சை துறை இயக்குனர் டாக்டர் கண்ணன், இதய அறுவை சிகிச்சைத் துறை பேராசிரியர் டாக்டர் மாரியப்பன், அடங்கிய டாக்டர் குழு உடனடியாக அறுவை சிகிச்சை செய்து, அவரது தோள்பட்டையை குத்தி கிழித்த கம்பியை வெற்றிகரமாக அகற்றினர்.
இதனை அறிந்த சுகாதாரத்துறை முதன்மை செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன், ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு நேற்று காலை சென்று, தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த புவனேஷ்குமாரிடம், அவருக்கு வழங்கப்படும் சிகிச்சை குறித்து கேட்டறிந்தார்.
மேலும், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, அடுத்த ½ மணி நேரத்தில் அறுவை சிகிச்சை செய்து, காயம் அடைந்தவரை காப்பாற்றிய டாக்டர்கள் குழுவையும், அவர்களை ஒருங்கிணைத்த மருத்துவமனை டீன் டாக்டர் தேரணிராஜனையும் பாராட்டினார்.
Related Tags :
Next Story