விவசாயிகளுக்கு ஆதரவாக திருவள்ளூர் மாவட்டத்தில் அனைத்து எதிர்க்கட்சியினர் ஆர்ப்பாட்டம்


விவசாயிகளுக்கு ஆதரவாக திருவள்ளூர் மாவட்டத்தில் அனைத்து எதிர்க்கட்சியினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 9 Dec 2020 3:15 AM IST (Updated: 9 Dec 2020 2:35 AM IST)
t-max-icont-min-icon

3 விவசாய சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாக திருவள்ளூர் மாவட்டத்தில் அனைத்து எதிர்க்கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திருவள்ளூர்,

விவசாயிகளை பாதிப்பதாக கூறப்படும் 3 வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி டெல்லியில் விவசாயிகள் தொடர் போராட்டம் ஈடுபட்டு வருகின்றனர். இதைத் தொடர்ந்து அவர்களுக்கு ஆதரவாக நேற்று திருவள்ளூர் உழவர் சந்தை அருகே தி.மு.க. மற்றும் கட்சிகள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு தி.மு.க.வின் திருவள்ளூர் மேற்கு மாவட்ட பொறுப்பாளர் பூபதி, திருவள்ளூர் தொகுதி எம்.எல்.ஏ. வி.ஜி. ராஜேந்திரன் ஆகியோர் தலைமை தாங்கினர்.

திருவள்ளூரில் வழக்கம்போல கடைகள் அனைத்தும் நேற்று திறந்து இருந்தது. இந்நிலையில் திருவள்ளூர் அடுத்த பேரம்பாக்கத்தில் விவசாயிகளுக்கு ஆதரவாக டீக்கடை, மளிகை கடை, ஓட்டல்கள், இனிப்பகம், துணி கடை, மளிகை கடை உள்பட 200-க்கும் மேற்பட்ட கடைகள் முழுவதுமாக அடைக்கப்பட்டது.

மணவாளநகர், கடம்பத்தூர், ஒண்டிகுப்பம், செவ்வாப்பேட்டை, வேப்பம்பட்டு, திருவூர், திருமழிசை, வெள்ளவேடு, திருப்பாச்சூர் போன்ற பகுதிகளில் கடைகள் வழக்கம் போல் திறந்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி கமலா தியேட்டர் அருகே தி.மு.க., காங்கிரஸ், கம்யூனிஸ்டு, ம.தி.மு.க. உள்ளிட்ட தோழமை கட்சிகள் சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மத்திய அரசை கண்டித்து விவசாயிகளுக்கு பாதகமாக உள்ள சட்டங்களை ரத்து செய்ய கோரி அவர்கள் கோஷங்கள் எழுப்பினர்.

டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் தி.மு.க. கூட்டணி மற்றும் தொழிற்சங்கங்கள் சார்பாக நேற்று காலை ஆவடி அண்ணா சிலை அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு திருவள்ளூர் மத்திய மாவட்ட தி.மு.க. செயலாளர் சா.மு.நாசர் தலைமை தாங்கினார்.

மேலும் கம்யூனிஸ்டு, காங்கிரஸ், ம.தி.மு.க., வி.சி.க., உள்ளிட்ட கூட்டணி கட்சிகளை சேர்ந்த 300-க்கும் மேற்பட்டோர் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.

கும்மிடிப்பூண்டியில் விவசாய சங்க மாவட்ட செயலாளர் துளசிநாராயணன் தலைமையில் இடது சாரி கட்சிகள் மற்றும் காங்கிரசார் சார்பில் ஆர்ப்பாட்டமும், சாலை மறியலும் நடைபெற்றது. போராட்டத்தில் ஈடுபட்ட 4 பெண்கள் உள்பட மொத்தம் 62 பேரை கும்மிடிப்பூண்டி போலீசார் கைது செய்தனர்.

அதே போல எளாவூரில் அகில இந்திய விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பாளர் அருள் தலைமையில் நடைபெற்ற சாலை மறியல் போராட்டத்தில் பங்கேற்ற 5 பெண்கள் உள்பட மொத்தம் 60 பேரை ஆரம்பாக்கம் போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட அனைவரும் மாலையில் விடுவிக்கப்பட்டனர்.

எல்லாபுரம் தெற்கு ஒன்றிய தி.மு.க. சார்பில் மத்திய அரசின் புதிய வேளாண் சட்டத்தை எதிர்த்து கண்டன பேரணி, கண்டன ஆர்ப்பாட்டம், சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. இதற்கு, எல்லாபுரம் தெற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் சத்தியவேல் தலைமை தாங்கினார்.

போராட்டத்தில் கம்யூனிஸ்டு, விடுதலை சிறுத்தைகள், ம.தி.மு.க., காங்கிரஸ் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் உள்ளிட்ட நூற்றுக்கணக்கானோர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால் திருவள்ளூர்-செங்குன்றம் நெடுஞ்சாலைகளிலும், பெரியபாளையம்-ஆவடி நெடுஞ்சாலைகளிலும் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. வெங்கல் காவல் நிலைய போலீசார் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்துள்ளனர்.

சோழவரம் ஒன்றியம் ஆரணி பேரூர் தி.மு.க. சார்பில் நடைபெற்ற கண்டன போராட்டத்தில் ஈடுபட்ட 60 பேரை ஆரணி காவல் நிலைய போலீசார் கைது செய்து அங்குள்ள தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர்.

Next Story