மராட்டியத்தில் விவசாயிகளுக்கு ஆதரவாக கடைகள் மூடப்பட்டன: அமைதியாக நடந்த முழு அடைப்பு - பஸ், ரெயில்கள் வழக்கம்போல ஓடின
மராட்டியத்தில் விவசாயிகள் முழு அடைப்பு போராட்டத்திற்கு ஆதரவாக மார்க்கெட்டுகள், கடைகள் அடைக்கப்பட்டன. ஆனால் பஸ், ரெயில்கள் வழக்கம் போல ஓடின.
மும்பை,
மத்திய பா.ஜ.க. கூட்டணி அரசு கொண்டுவந்துள்ள 3 வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் போர்க்கொடி உயர்த்தி வருகின்றனர்.
இந்த சட்டங்களால் வேளாண் உற்பத்தி பொருட்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை வழங்கும்முறை ஒழிந்து விடும், கார்ப்பரேட் என்னும் பெருநிறுவனங்களின் தயவில்தான் விவசாயிகள் வாழ முடியும் என்ற நிலை வந்துவிடும் என்று அஞ்சி, இந்த 3 சட்டங்களையும் விவசாயிகள் முழுமூச்சுடன் எதிர்த்து வருகின்றனர்.
ஆனால் இந்த சட்டங்கள் விவசாயிகளுக்கு நன்மைத்தான் தரும், புதிய வாய்ப்புகளையும், தொழில்நுட்பங்களையும் கொண்டுவரும் என மத்திய அரசு கூறியும், அது விவசாயிகளுக்கு திருப்தி அளிக்கவில்லை.
இந்த 3 சட்டங்களையும் வாபஸ் பெற விடாப்பிடியுடன் வலியுறுத்தி, டெல்லியின் எல்லைகளில் பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் பஞ்சாப், அரியானா உள்ளிட்ட வட மாநிலங்களில் இருந்து வந்து குவிந்து தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். நேற்று இது 13-வது நாளை எட்டியது.
இந்த நிலையில், 8-ந் தேதி ஒரு நாள் நாடுதழுவிய முழு அடைப்பு போராட்டம் நடத்தப்படும் என விவசாயிகள் அமைப்பினர் அறிவித்தனர். இந்த முழு அடைப்பு போராட்டத்துக்கு காங்கிரஸ் உள்ளிட்ட 19 எதிர்க்கட்சிகளும், தொழிற்சங்கங்களும் ஆதரவுக்கரம் நீட்டின. இதில் மராட்டியத்தை சேர்ந்த ஆளும் கூட்டணி கட்சிகளான சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கட்சிகளும் ஆதரவு அளித்தன.
அதன்படி நேற்று நாடு தழுவிய முழு அடைப்பு போராட்டம் நடந்தது. போராட்டக்காரர்கள் சாலை மறியல், ரெயில் மறியல் போன்ற செயல்களில் ஈடுபட்டு பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படுத்த கூடாது என மராட்டிய அரசு கேட்டுக்கொண்டு இருந்தது.
இந்தநிலையில் நேற்று விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவு அளிக்கும் வகையில் மாநிலம் முழுவதும் காய்கறி மார்க்கெட்டுகள் மூடப்பட்டன. நவிமும்பை வாஷி மொத்த மார்க்கெட்டும் மூடப்பட்டன. புனே மார்க்கெட்டுக்கு நேற்று முன்தினம் இரவு வெளிமாநிலங்களில் இருந்து பொருட்கள் ஏற்றிய 25 லாரிகள் உள்பட 188 வாகனங்கள் வந்தன. எனினும் நேற்று மார்க்கெட்டில் கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டு இருந்தன.
மும்பை, தானே, பால்கர், புனே உள்பட மாநிலத்தில் பெரும்பாலான இடங்களில் கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன. குறிப்பாக மும்பையில் தாதர், லால்பாக், பெண்டி பஜார், தாராவி, குர்லா உள்ளிட்ட பல இடங்களில் கடைகள் மூடப்பட்டு இருந்ததை காண முடிந்தது. இதனால் முக்கிய சாலைகள் வெறிச்சோடியே காணப்பட்டன. ஒரு சில இடங்களில் கடைகள் வழக்கம் போல திறந்து இருந்தன.
மும்பை, தானேயில் பல இடங்களில் விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவாக சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், கம்யூனிஸ்ட் உள்ளிட்ட அரசியல் கட்சியினர் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர். விவசாய அமைப்புகளும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஒரு சில இடங்களில் அரசியல் கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டதால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
முழு அடைப்புக்கு ஆதரவு தெரிவித்து லாரி உரிமையாளர்கள் முழு அளவில் வேலை நிறுத்தம் செய்தனர். ஆனால் மருந்து, பால் உள்ளிட்ட அத்தியாவசிய லாரிகளுக்கு மட்டும் விலக்கு அளிக்கப்பட்டது.
அதேவேளையில் நேற்று மும்பையில் பெஸ்ட் பஸ், ஆட்டோ, டாக்சிகள் மின்சார ரெயில்கள் வழக்கம் போல இயக்கப்பட்டன. மும்பையில் 3 ஆயிரத்து 435 சேவைகளில், 2 ஆயிரத்து 913 பெஸ்ட் பஸ் சேவைகள் அதாவது 85 சதவீத பஸ்கள் இயக்கப்பட்டதாக பெஸ்ட் மக்கள் தொடர்பு அதிகாரி கூறினார்.
இதேபோல போதிய பயணிகள் கூட்டம் இல்லாத இடங்கள் தவிர மற்ற இடங்களில் வழக்கம் போல அரசு பஸ்கள் இயக்கப்பட்டதாக மாநில சாலை போக்குவரத்து கழக மக்கள் தொடர்பு அதிகாரி அபிஜித் போஸ்லே கூறினார். போக்குவரத்துக்கு இடையூறாக விரும்பத்தகாத செயல்கள் எதுவும் நடைபெறவில்லை எனவும் அவர் தெரிவித்தார்.
புனேயிலும் மாநகர பஸ்கள் சேவை தடையின்றி இயக்கப்பட்டதாக பி.எம்.பி.எம்.எல். அதிகாரி கூறினார்.
இதேபோல மும்பையில் புறநகர் ரெயில்கள் உள்பட மாநிலம் முழுவதும் ரெயில்கள் வழக்கம் போல இயக்கப்பட்டன. பஸ், ரெயில்கள் ஓடியதால் மக்களின் இயல்பு வாழ்க்கையில் பெரிய அளவில் பாதிப்பு ஏற்படவில்லை.
மேலும் மாநிலம் முழுவதும் அசம்பாவித சம்பவங்கள் எதுவும் இன்றி அமைதியான முறையில் முழு அடைப்பு போராட்டம் நடந்தது.
Related Tags :
Next Story