விபத்தில் காயமடைந்த முதியவரை மேல்சிகிச்சைக்கு அனுப்பிய அமைச்சர் காமராஜ் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்


விபத்தில் காயமடைந்த முதியவரை மேல்சிகிச்சைக்கு அனுப்பிய அமைச்சர் காமராஜ் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்
x
தினத்தந்தி 9 Dec 2020 6:50 AM IST (Updated: 9 Dec 2020 6:50 AM IST)
t-max-icont-min-icon

வலங்கைமான் அருகே விபத்தில் காயமடைந்த முதியவரை மேல் சிகிச்சைக்கு அமைச்சர் காமராஜ் அனுப்பி வைத்தார்.

வலங்கைமான்,

திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அருகே உள்ள ஆலங்குடியில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள நேற்று மதியம் உணவு மற்றும் நுகர்பொருள் வழங்கல் துறை அமைச்சர் ஆர்.காமராஜ் காரில் சென்றார். அமைச்சர் வருவதற்கு சற்று முன் ஆலங்குடி- மன்னார்குடி மெயின் ரோட்டில் அடையாளம் தெரியாத ஒரு வாகனம் முதியவர் மீது மோதி விட்டு நிற்காமல் சென்றது. இதில் படுகாயமடைந்த முதியவர் ஆலங்குடி ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு...

இது குறித்து தகவல் அறிந்த அமைச்சர் காமராஜ் உடனடியாக ஆலங்குடி ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு சென்று விபத்தில் காயமடைந்த முதியவரை நேரில் பார்த்து ஆறுதல் கூறினார். மேலும் அமைச்சர் காமராஜ் உடனடியாக அந்த முதியவரை மேல் சிகிச்சைக்காக கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்ல உத்தரவிட்டார்.

இதைத்தொடர்ந்து காயமடைந்த முதியவர் 108 ஆம்புலன்ஸ் மூலம் கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். காயமடைந்த முதியவரிடம் தனது செல்போன் எண்ணை கொடுத்த அமைச்சர் காமராஜ், உடல்நிலை குறித்து எந்த நேரத்திலும் தன்னை தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம் என கூறினார். விபத்தில் காயமடைந்த முதியவரை கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு அமைச்சர் அனுப்பி வைத்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Next Story