மழை ஓய்ந்து, வெயில் சுட்டெரித்தது: 7 நாட்களுக்கு பிறகு இயல்பு வாழ்க்கை திரும்புகிறது


மழை ஓய்ந்து, வெயில் சுட்டெரித்தது: 7 நாட்களுக்கு பிறகு இயல்பு வாழ்க்கை திரும்புகிறது
x
தினத்தந்தி 9 Dec 2020 4:21 AM GMT (Updated: 9 Dec 2020 4:21 AM GMT)

கடலூர் மாவட்டத்தில் நேற்று மழை குறைந்து வெயில் சுட்டெரித்ததால் 7 நாட்களுக்கு பிறகு மக்களின் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பினர்.

கடலூர்,

வங்க கடலில் உருவான புரெவி புயல் காரணமாக கடந்த 2-ந் தேதி முதல் நேற்று முன்தினம் வரை கடலூர் மாவட்டத்தில் கனமழை பெய்தது. இந்த மழையால் மாவட்டத்தில் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகளை மழைவெள்ளம் சூழ்ந்தது. 1,951 வீடுகள் சேதமடைந்தது. 210 ஆடு, மாடுகளும், 20 ஆயிரம் கோழிகளும் செத்தன. 45 ஆயிரம் ஹெக்டேர் விவசாய நிலங்கள் தண்ணீரில் மூழ்கின.

இதற்கிடையே மாவட்டத்தில் 7 நாட்களுக்கு பிறகு நேற்று காலை கடும் வெயில் சுட்டெரித்தது. இதனால் தொடர்ந்து ஒரு வாரமாக சூரியனை பார்க்க முடியாமல், தொடர் மழையால் பாதிக்கப்பட்ட மக்கள் இயல்பு வாழ்க்கை திரும்புவதை நினைத்து நிம்மதி அடைந்தனர். ஆனால் காலை 9.30 மணி அளவில் திடீரென மீண்டும் மழை பெய்ய தொடங்கியது. இந்த மழை சுமார் ¼ மணி நேரம் நீடித்தது.

கடும் வெயில்

அதன் பிறகு அவ்வப்போது விட்டு விட்டு சாரல் மழை பெய்த போதிலும், கடும் வெயிலும் சுட்டெரித்தது. மேலும் கடும் வெயில் சுட்டெரிக்கும் போது, மழை பெய்த அரிய சம்பவமும் கடலூரில் நேற்று பலமுறை நடந்தது.

கடந்த சில நாட்களாக பெய்த தொடர்மழையால் கடலூர் தென்பெண்ணையாற்றின் குறுக்கே உள்ள தடுப்பணையில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதையறிந்த கடலூர் நகர மக்கள் கூட்டம் கூட்டமாக தடுப்பணையை பார்வையிட்டதோடு, ஆபத்தை உணராமல் தங்களது இருசக்கர, நான்கு சக்கர வாகனங்களை தடுப்பணைதரைப்பாலத்தில் நிறுத்தி சுத்தம் செய்து, குளித்துச் செல்கிறார்கள். கடலூரில் நேற்று காலை பெய்த மழையின்போது பாதசாரிகள், இருசக்கர வாகன ஓட்டிகள் குடைகளை பிடித்தபடி சென்றனர். இதேபோல் காட்டுமன்னார்கோவில், சிதம்பரம், தொழுதூர், சேத்தியாத்தோப்பு, வேப்பூர், புவனகிரி, பண்ருட்டி, குறிஞ்சிப்பாடி, விருத்தாசலம், ஸ்ரீமுஷ்ணம் மற்றும் மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்தது. நேற்று முன்தினம் காலை 8.30 மணி முதல் நேற்று காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் மாவட்டத்தில் அதிகபட்சமாக வடக்குத்தில் 63 மில்லி மீட்டரும், குறைந்தபட்சமாக ஸ்ரீமுஷ்ணத்தில் 22.3 மில்லி மீட்டரும் மழை பெய்துள்ளது.

வெளியேற்றும் பணி

இதற்கிடையே நேற்று மதியத்திற்கு பிறகு மழை முற்றிலும் ஓய்ந்து, கடும் வெயில் சுட்டெரித்தது. இதனால் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் குடியிருப்புகளை சூழ்ந்துள்ள தண்ணீரை வடிய வைக்கும் பணியில் அந்தந்த பகுதி பேரூராட்சி, நகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். வடிகால் வசதி இல்லாத பகுதிகளில் சாலையின் குறுக்கே பள்ளம் தோண்டி, குழாய் அமைத்தும், மோட்டார் மூலமாகவும் மழைநீரை வெளியேற்றும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

இதேபோல் என்.எல்.சி. இரண்டாம் சுரங்கத்திலிருந்து வெளியேற்றப்பட்ட மழைநீரால், கம்மாபுரத்தில் உள்ள ஏரியின் கரையில் உடைப்பு ஏற்பட்டது. அதனை என்.எல்.சி. ஊழியர்கள் நேற்று சீரமைத்தனர்.

Next Story