‘டிக்டாக்‘ வீடியோக்களை ஆபாசமாக சித்தரித்த இளம்பெண் கைது போலீசாரை கண்டித்து போராட்டம் நடத்தியதால் பரபரப்பு


‘டிக்டாக்‘ வீடியோக்களை ஆபாசமாக சித்தரித்த இளம்பெண் கைது போலீசாரை கண்டித்து போராட்டம் நடத்தியதால் பரபரப்பு
x
தினத்தந்தி 9 Dec 2020 4:14 PM IST (Updated: 9 Dec 2020 5:12 PM IST)
t-max-icont-min-icon

‘டிக்டாக்‘ வீடியோக்களை ஆபாசமாக சித்தரித்த இளம்பெண் கைது, போலீசாரை கண்டித்து போராட்டம் நடத்தியதால் பரபரப்பை ஏற்படுத்தியது.

தேனி, 

தேனி அருகே உள்ள நாகலாபுரத்தை சேர்ந்த ராஜு மகள் சுகந்தி (வயது 29) . இவர் ‘டிக்டாக்‘ செயலியில் பல்வேறு வீடியோக்களை பதிவிட்டு வந்தார். அந்த செயலி தடை செய்யப்பட்ட நிலையில், அதில் இருந்த வீடியோக்களை தஞ்சாவூர் மாவட்டம் கரந்தை பகுதியை சேர்ந்த சோமசுந்தரம் மகள் திவ்யா என்பவர் பதிவிறக்கம் செய்து, ஆபாசமாக சித்தரித்து சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்ததாக கூறப்படுகிறது. இதற்கு மேலும் சிலர் தூண்டுதலாக இருந்துள்ளனர். மேலும் இந்த வீடியோக்களில் சுகந்தியின் குடும்பத்தினர் குறித்தும் அவதூறான கருத்துக்களை பதிவிட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து பழனிசெட்டிபட்டி போலீஸ் நிலையத்தில் சுகந்தி புகார் செய்தார். அதன்பேரில் திவ்யா (26) , ஸ்ரீரெங்காபுரத்தை சேர்ந்த மணிகண்டன், நாகலாபுரத்தை சேர்ந்த ரமேஷ், அரப்படித்தேவன்பட்டியை சேர்ந்த அழகர்ராஜா, மதுரையை சேர்ந்த செல்வா ஆகிய 5 பேர் மீதும் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் யாழிசை செல்வன் வழக்குப்பதிவு செய்தார். இதில் திவ்யாவை போலீசார் நேற்று கைது செய்து விசாரணை நடத்தினர். பின்னர் அவரை சொந்த ஜாமீனில் போலீசார் விடுவித்தனர். இந்நிலையில் அவர் தேனி பழைய பஸ் நிலையம் முன்பு மதுரை சாலையில் நேற்று இரவு அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டார். போலீசார் தனது செல்போனை வாங்கிக் கொண்டு திருப்பித் தர மறுத்ததாக கூறியும், போலீசாரை கண்டித்தும் அவர் போராட்டத்தில் ஈடுபட்டார். தகவல் அறிந்ததும் தேனி போலீசார் அங்கு விரைந்து வந்து திவ்யாவை போலீஸ் வேனில் ஏற்றி பழனிசெட்டிபட்டி போலீஸ் நிலையத்திற்கு கொண்டு சென்றனர். அங்கு அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது. இந்த சம்பவம் தேனியில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story