காரைக்குடி அருகே மழை வெள்ளத்தில் மண் சாலை துண்டிப்பு கிராம மக்கள் அவதி + "||" + Near Karaikudi In the flood of rain Dirt road disconnection The villagers are suffering
காரைக்குடி அருகே மழை வெள்ளத்தில் மண் சாலை துண்டிப்பு கிராம மக்கள் அவதி
காரைக்குடி அருகே தொடர் மழையால் மண்சாலை துண்டிக்கப்பட்டது. இதனால் அந்த கிராம மக்கள் மிகவும் அவதிப்பட்டு வருகிறார்கள்.
காரைக்குடி,
காரைக்குடி அருகே உள்ள சாக்கோட்டை யூனியனுக்கு உட்பட்டது பெரியகொட்டக்குடி ஊராட்சி. இந்த ஊராட்சிக்குட்பட்ட நெம்மேனி கிராமத்தில் சுமார் 100-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இங்குள்ள மக்கள் பெரும்பாலும் விவசாய தொழிலை நம்பி வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த சில நாட்களாக சிவகங்கை மாவட்டம் முழுவதும் நிவர் மற்றும் புரெவி புயல் காரணமாக தொடர்ந்து பலத்த மழை பெய்தது.
இதையொட்டி காரைக்குடி மற்றும் அதை சுற்றியுள்ள பகுதியில் உள்ள கண்மாய்கள் நிரம்பி மறுகால் பாய்ந்து வருகிறது. இந்நிலையில் இந்த பலத்த மழை காரணமாக பல்வேறு இடங்களில் உள்ள சாலைகள் பெயர்ந்தும், சாலையோரங்களில் அரிப்பும் ஏற்பட்டு உள்ளது.
இந்நிலையில் நெம்மேனி கிராமத்தில் நடுவே உள்ள மண் சாலை ஒன்று மழை வெள்ளத்தினால் நடுவில் துண்டிக்கப்பட்டது. இதையடுத்து அந்த பகுதியில் உள்ள 30-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் காரைக்குடி, சாக்கோட்டை, புதுவயல் உள்ளிட்ட பகுதிகளுக்கு வாகனங்களில் செல்ல முடியாமல் தவித்தனர்.
இதுகுறித்து பெரியகொட்டக்குடி ஊராட்சி மன்ற தலைவர் தனபால் சாக்கோட்டை யூனியன் அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்து துண்டிக்கப்பட்ட சாலையை சரி செய்ய வலியுறுத்தினார். இதைத்தொடர்ந்து துண்டிக்கப்பட்ட சாலை பகுதியை சாக்கோட்டை யூனியன் தலைவர் சரண்யாசெந்தில், யூனியன் வட்டார வளர்ச்சி அலுவலர் திருப்பதிராஜன், ஊராட்சி தலைவர் தனபால் ஆகியோர் பார்வையிட்டனர். மேலும் துண்டிக்கப்பட்ட சாலை விரைவில் சீரமைக்கப்பட்டு விரைவில் தார்ச்சாலை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கிராம மக்களிடம் உறுதியளித்தனர்.
இதற்கிடையே மண்சாலை துண்டிக்கப்பட்டதால் அத்தியாவசிய பொருட்கள் கூட நகரத்துக்கு சென்று வாங்கி வர முடியவில்லை என பொதுமக்கள் அவதிப்பட்டு வருகிறார்கள். துண்டிக்கப்பட்ட சாலையை விரைந்து சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து உள்ளனர்.