புதிய வேளாண் சட்டங்களை திரும்ப பெறக்கோரி போராட்டம் கடைகள் அடைப்பு
ராமநாதபுரம் மாவட்டத்தில் புதிய வேளாண் சட்டங்களை திரும்ப பெறக்கோரி தி.மு.க மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
பரமக்குடி,
ராமேசுவரத்தில் நேற்று இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் சார்பில் வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு இந்திய கம்யூனிஸ்டு தாலுகா செயலாளர் முருகானந்தம் தலைமை தாங்கினார். மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர் செந்தில்வேல் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். இதேபோல் தங்கச்சிமடம் வலசை பஸ் நிறுத்த பகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு சார்பில் சாலை மறியல் போராட்டம் நடந்தது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாவட்ட குழு உறுப்பினர் ஜஸ்டின், ராமேசுவரம் தாலுகா செயலாளர் சிவா, செயற்குழு உறுப்பினர் கருணாகரன் உள்பட பலர் கலந்து கொண்டனர். சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்தனர். அதுபோல் தங்கச்சிமடத்தில் இந்திய கம்யூனிஸ்டு சார்பில் போராட்டம் நடந்தது. மேலும் பாம்பன் வடக்கு கடற்கரையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான மீனவர்கள் கலந்து கொண்டு மத்திய அரசுக்கு எதிராகவும், வேளாண் சட்டங்களை ரத்து செய்யக் கோரியும் கோஷமிட்டனர். பாம்பன் வடக்கு கடல் பகுதியில் படகுகளில் கருப்புக் கொடி கட்டி மீனவர்கள் வேளாண் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.
கடலாடி, சிக்கல், சாயல்குடி ஆகிய பகுதிகளில் தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தி.மு.க. மாவட்ட பொறுப்பாளர் காதர்பாட்சா முத்துராமலிங்கம் உத்தரவுபடி நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு கடலாடி ஒன்றிய தி.மு.க. பொறுப்பாளர் ஆப்பனூர் ஆறுமுகவேல் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் மத்திய, மாநில அரசுகளை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன. சாயல்குடியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு தி.மு.க. ஒன்றிய செயலாளர் ஜெயபாலன் தலைமை தாங்கினார். பேரூர் செயலாளர் வெங்கடேஷ், மாவட்ட வர்த்தக அணி அமைப்பாளர் தமிழ்ச்செழியன், ஒன்றிய இளைஞரணி செயலாளர் சத்தியேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.
தொண்டி பேரூராட்சியில் கடையடைப்பு போராட்டம் நடைபெற்றது. இதனால் கடைவீதிகள், பஸ் நிலையம், கிழக்கு கடற்கரை சாலை, காய்கறி மார்க்கெட் வீதி, பஸ் நிலைய சாலை போன்ற முக்கியவீதிகள் வெறிச்சோடி கிடந்தன.
திருவாடானையில் ஓரியூர் நான்குமுனை சந்திப்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தி.மு.க. தெற்கு ஒன்றிய செயலாளர் சரவணன் தலைமை தாங்கினார். வட்டார காங்கிரஸ் தலைவர் கோடனூர் கணேசன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாவட்ட குழு உறுப்பினர் முத்துராமு, தி.மு.க. மாவட்ட விவசாய தொழிலாளர் அணி துணை அமைப்பாளர் அறிவழகன் முன்னிலை வகித்தனர். செந்தில்குமார் வரவேற்றார். இதில் தி.மு.க. தலைமை பொதுக்குழு உறுப்பினர் ஆனிமுத்து, மாவட்ட காங்கிரஸ் துணைத்தலைவர் மரிய அருள், பொதுச்செயலாளர் வக்கீல் கண்ணன், கவுன்சிலர் கார்த்திகேயன் ராஜா, தி.மு.க. நகர செயலாளர் பாலமுருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
பரமக்குடி பஸ் நிலையம் பகுதியில் கம்யூனிஸ்டு கட்சி தாலுகா செயலாளர் ராஜா, த.மு.மு.க. நகர செயலாளர் சேக் அப்துல்லா, விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் வேந்தை சிவா ஆகியோர் தலைமையில் சாலை மறியல் நடந்தது. இதைதொடர்ந்து 86 பேரை போலீசார் கைது செய்தனர். இதில் தி.மு.க. நகர இளைஞர் அணி அமைப்பாளர் சம்பத்குமார், பொதுக்குழு உறுப்பினர் அருளாந்து, மாவட்ட துணைச்செயலாளர் கருப்பையா, கவுன்சிலர் முருகேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர். போகலூர் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் சத்யா குணசேகரன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. ஒன்றிய பொருளாளர் வக்கீல் குணசேகரன் முன்னிலை வகித்தார். இதில் மாவட்ட வழக்கறிஞர் அணி துணை அமைப்பாளர் வக்கீல் சஞ்சய் காந்தி, ஒன்றிய கவுன்சிலர் பாதாள பைரவன் தேன்மொழி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story