ரியல் எஸ்டேட் அதிபரை கொலைசெய்ய ரூ.50 லட்சம் பேரம் பேசிய கூலிப்படை - கைதான 2 பேர் பரபரப்பு வாக்குமூலம்


ரியல் எஸ்டேட் அதிபரை கொலைசெய்ய ரூ.50 லட்சம் பேரம் பேசிய கூலிப்படை - கைதான 2 பேர் பரபரப்பு வாக்குமூலம்
x
தினத்தந்தி 9 Dec 2020 7:49 PM IST (Updated: 9 Dec 2020 7:49 PM IST)
t-max-icont-min-icon

திருவண்ணாமலையில் ரியல் எஸ்டேட் அதிபரை கொலைசெய்ய ரூ.50 லட்சம் மற்றும் கார் கேட்டு கூலிப்படையினர் பேரம்பேசி உள்ளனர். முதல் கட்டமாக ரூ.30 லட்சம் பெற்றுள்ளனர்.

திருவண்ணாமலை,

திருவண்ணாமலை காந்திநகர் 3-வது தெருவை சேர்ந்தவர் பங்க் பாபு (வயது 47). ரியல் எஸ்டேட் மற்றும் பைனான்ஸ் நடத்தி வந்தார். கடந்த 2017-ம் ஆண்டு திருவண்ணாமலை நகர அ.தி.மு.க. செயலாளராக இருந்த கனகராஜ் என்பவரை பங்க் பாபு மற்றும் சிலர் சேர்ந்து முன்விரோதம் காரணமாக சராமரியாக வெட்டி கொலை செய்தனர்.

இதில் கைதுசெய்யப்பட்ட பங்க் பாபு ஜாமீனில் வந்திருந்தார். இந்த நிலையில் கடந்த 3-ந் தேதி பங்க் பாபு திருவண்ணாமலை காந்திநகர் பைபாஸ் சாலையில் உள்ள டீக்கடையில் வைத்து மர்ம கும்பலால் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இது குறித்து திருவண்ணாமலை கிழக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

போலீசார் நடத்திய விசாரணையில் கனகராஜ் கொலை செய்யப்பட்டதற்கு பழிக்கு பழியாக கூலிப்படையை வைத்து இந்த கொலை நடந்தது உறுதி செய்யப்பட்டது. அதைத்தொடர்ந்து இச்சம்பவம் தொடர்பாக கூலிப்படையை ஏவிய கனகராஜின் மனைவி, மாமியார் உள்பட 3 பேரை முதல்கட்டமாக போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து நேற்று முன்தினம் கூலிப்படையாக செயல்பட்ட திருவண்ணாமலை வேங்கிக்காலை சேர்ந்த வினோத்குமார் (35) , சிவராத்திரி மடத்தெருவைச் சேர்ந்த பார்த்திபன் (29) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

கைதான 2 பேரும் போலீசில் அளித்துள்ள வாக்குமூலத்தில் கூறியிருப்பதாக போலீசார் தெரிவித்ததாவது:

இந்த கொலை சம்பவத்தில் வேலூரை சேர்ந்த கூலிப்படையினர் ஈடுபட்டு உள்ளனர். பங்க் பாபுவை கொலை செய்ய ரூ.50 லட்சம் மற்றும் ஒரு கார் பேரம் பேசப்பட்டு உள்ளது. அதில் முன் பணமாக ரூ.30 லட்சம் பெற்று உள்ளனர். கூலிப்படையினர், பங்க பாபுவை கொலைசெய்வதற்கு 10 நாட்களுக்கும் மேலாக வேங்கிக்காலில் ஒரு வீட்டில் தங்கி இருந்து உள்ளனர்.

இச்சம்பவத்தின் முக்கிய குற்றவாளிகளான கனகராஜ் மனைவியின் தம்பி திருவண்ணாமலை பெரும்பாக்கம் ரோடு எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்த விவேகானந்தன் மற்றும் அவரது நண்பர் அதேபகுதியை சேர்ந்த கார்த்தி ஆகியோர் இன்று (புதன்கிழமை) கைது செய்யப்பட உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

Next Story