வேளாண் சட்டங்களை ரத்து செய்யக்கோரி தி.மு.க. கூட்டணி கட்சியினர் ஆர்ப்பாட்டம்


வேளாண் சட்டங்களை ரத்து செய்யக்கோரி தி.மு.க. கூட்டணி கட்சியினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 9 Dec 2020 9:03 PM IST (Updated: 9 Dec 2020 9:03 PM IST)
t-max-icont-min-icon

வேளாண் சட்டங்களை ரத்து செய்யக்கோரி தர்மபுரி மாவட்டம் முழுவதும் தி.மு.க. கூட்டணி கட்சியினர் பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தர்மபுரி,

மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் திருத்த சட்டங்களை ரத்து செய்ய கோரியும், டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து தி.மு.க. கூட்டணி கட்சிகள் சார்பில் பொது வேலைநிறுத்தம் மற்றும் முழு அடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. அதன்படி தர்மபுரி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன. முக்கிய இடங்களில் தி.மு.க. கூட்டணி கட்சிகளின் சார்பில் வேளாண் சட்டங்களை ரத்து செய்யக்கோரி கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றது.

தர்மபுரி நகரில் இந்த முழு அடைப்பு போராட்டத்திற்கு வணிகர்கள் சங்கம் ஆதரவு தெரிவித்த நிலையில் பெரும்பாலான கடைகள் திறந்து இருந்தது. பஸ்கள் வழக்கம் போல் ஓடின. தி.மு.க. கூட்டணி கட்சிகளின் சார்பில் தர்மபுரி 4 ரோட்டில் தி.மு.க. மாவட்ட பொறுப்பாளர் தடங்கம் சுப்பிரமணி எம்.எல்.ஏ. தலைமையில் வேளாண் சட்டங்களுக்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அப்போது மத்திய அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பப்பட்டது.

இந்த ஆர்ப்பாட்டத்தை தொடர்ந்து தி.மு.க. கூட்டணி கட்சியினர் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக சென்று தர்மபுரி தலைமை தபால் நிலையம் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தில் தி.மு.க. சார்பில் நகர பொறுப்பாளர் அன்பழகன், முன்னாள் எம்.பி. தாமரைச்செல்வன், நிர்வாகிகள் நாட்டான் மாது, தங்கமணி, முல்லைவேந்தன், காங்கிரஸ் நகர தலைவர் செந்தில்குமார், இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் தேவராஜன், முன்னாள் எம்.எல்.ஏ. டில்லிபாபு, விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் ஜெயந்தி மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் ஊமை ஜெயராமன், சிவாஜி, தென்றல் யாஸீன், நிஜாமுதீன் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டு மத்திய அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர்.

இதேபோன்று பென்னாகரம் பஸ் நிலையம் அருகில் தி.மு.க. கூட்டணி கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு இன்பசேகரன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர் மாதன், விடுதலை சிறுத்தைகள் தொகுதி செயலாளர் கருப்பண்ணன், தி.மு.க. ஒன்றிய செயலாளர் ஏரியூர் செல்வராஜ், நகர செயலாளர் வீரமணி மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள், பல்வேறு அமைப்பினர் கலந்து கொண்டனர்.

கடத்தூரில் தி.மு.க. கூட்டணி கட்சிகள் சார்பில் தி.மு.க. சட்ட திருத்தக்குழு துணை செயலாளர் தாமரைச்செல்வன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் தர்மபுரி கிழக்கு மாவட்ட பொறுப்புக்குழு உறுப்பினர் முனிராஜ், கடத்தூர் ஒன்றிய செயலாளர் பிரகாசம், காங்கிரஸ் மாவட்ட பொறுப்பாளர் வெங்கடாசலம், விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த பாலைய்யா, திராவிடர் கழகத்தை சேர்ந்த தமிழ்ச்செல்வன் மற்றும் கூட்டணி கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர். முழு அடைப்பு போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து கடத்தூரில் 90 சதவீத கடைகள் மூடப்பட்டது.

இதேபோல் கம்பைநல்லூரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு தி.மு.க. மாவட்ட பொறுப்புக்குழு உறுப்பினர் வாசுதேவன் தலைமை தாங்கினார். இதில் வகுரப்பம்பட்டி சரவணன் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் மாது, பெரியசாமி, மூர்த்தி, ஈஸ்வரன், விடுதலை சிறுத்தை கட்சி நகர செயலாளர் ராபர்ட் சொக்கன், சீனிவாசன், நாகராஜ், ராஜாமணி, மதி, நடேசன், சாமிநாதன், சின்னசாமி, பழனி உள்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்ட மசோதாக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தும் மொரப்பூரில் அனைத்து கடைகளும் மூடப்பட்டு இருந்தது. இதனால் மொரப்பூரில் மக்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டன.

விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் பாப்பாரப்பட்டியில் சாலை மறியல் போராட்டம் நடந்தது. இந்த போராட்டத்துக்கு வட்டார செயலாளர் சின்னசாமி தலைமை தாங்கினார். இதில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் அர்ஜுனன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இதேபோல் இண்டூர் பஸ் நிலையத்தில் தி.மு.க. கூட்டணி கட்சிகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு நல்லம்பள்ளி மேற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் சண்முகம் தலைமை தாங்கினார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி வட்டார செயலாளர் அப்புனு, இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாநிலக்குழு உறுப்பினர் சின்னசாமி, விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகி கிள்ளிவளவன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயற்குழு உறுப்பினர் மலையன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இதேபோன்று நல்லம்பள்ளி கிழக்கு ஒன்றிய தி.மு.க. கூட்டணி கட்சிகள் சார்பில், நல்லம்பள்ளியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றிய செயலாளர் சண்முகம் தலைமை தாங்கினார். இதில் முன்னாள் ஒன்றிய செயலாளர் துரைசாமி, அவைத்தலைவர் வீரமணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

பாலக்கோடு பஸ் நிலையம் அருகில் தலைமை செயற்குழு உறுப்பினர் முரளி தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் ஒன்றிய செயலாளர் குட்டி, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடாஜலம், மாவட்ட பொறுப்புக்குழு உறுப்பினர் மாதேஷ், மற்றும் கூட்டணி கட்சியினர் கலந்து கொண்டனர்.

வேளாண் திருத்த சட்டத்தை திரும்பப் பெறக் கோரி நாடு முழுவதும் விவசாயிகளுக்கு ஆதரவாக பல்வேறு அமைப்பினர் மற்றும் வணிகர்கள் சங்கம் சார்பில் முழு அடைப்பு போராட்டம் நடைபெற்றது. இதையொட்டி பாப்பிரெட்டிப்பட்டி, பொம்மிடி பகுதியில் உள்ள அனைத்து வணிக நிறுவனங்கள், பெட்டிக்கடைகள், ஓட்டல்கள் அடைக்கப்பட்டு இருந்தன. அத்தியாவசிய தேவைகளுக்கான மருந்தகங்கள், பால் விற்பனை நிலையம், மருத்துவமனைகள் திறந்து இருந்தன. இந்த பகுதியில் ஒரு சில பஸ்கள் மட்டுமே இயங்கின.

வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக தர்மபுரி மாவட்டம் முழுவதும் சவர தொழிலாளர்கள் தங்களது கடைகளை அடைத்தனர்.

Next Story