100 வறண்ட ஏரிகளுக்கு தண்ணீர் திட்டம்: நிலம் வழங்கிய உரிமையாளர்கள் 33 பேருக்கு ரூ.1.10 கோடி இழப்பீடு கலெக்டர் ராமன் வழங்கினார்
மேட்டூர் அணையில் இருந்து 100 வறண்ட ஏரிகளுக்கு தண்ணீர் கொண்டு செல்லும் திட்டத்துக்கு நிலம் வழங்கிய உரிமையாளர்கள் 33 பேருக்கு ரூ.1.10 கோடி இழப்பீட்டு தொகை மின்னணு பரிமாற்றம் மூலம் வழங்கப்பட்டதற்கான ஆணையை கலெக்டர் ராமன் வழங்கினார்.
மேச்சேரி
மேட்டூர் அணையின் உபரி நீரை சரபங்கா வடிநிலத்தில் உள்ள 100 வறண்ட ஏரிகளுக்கு நீரேற்று மூலம் வழங்கும் திட்டத்தை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார். இதையடுத்து இந்த திட்டத்தில் ஏரிகளுக்கு தண்ணீர் கொண்டு செல்ல குழாய் பதிக்கும் பணிக்கு தனியார் நிலங்கள் கையகப்படுத்தப்பட்டன.
அவ்வாறு நிலம் வழங்கிய தனியார் நில உரிமையாளர்களுக்கு அரசின் இழப்பீட்டு தொகை அவரவர்களின் வங்கிக் கணக்கிற்கு மின்னணு பரிமாற்றத்தில் அனுப்பப்பட்டதற்கான ஆணைகள் வழங்கும் நிகழ்ச்சி மேட்டூர் தாலுகா மேச்சேரி சார்பதிவாளர் அலுவலக வளாகத்தில் நேற்று நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் ராமன் தலைமை தாங்கி, இந்த திட்டத்திற்கு நிலம் வழங்கிய தனியார் நில உரிமையாளர்களில் முதற்கட்டமாக 33 பேருக்கு மின்னணு பரிமாற்றத்தின் மூலம் ரூ.1.10 கோடி அரசின் இழப்பீட்டு தொகை அவரவர்களின் வங்கி கணக்கிற்கு அனுப்பப்பட்டதற்கான ஆணைகளை வழங்கினார்.
பின்னர் இதுகுறித்து மாவட்ட கலெக்டர் ராமன் கூறியதாவது:-
முதல்-அமைச்சர் உத்தரவின்படி, மேட்டூர் அணையின் உபரி நீரினை சேலம் மாவட்டத்தில் உள்ள 100 வறண்ட ஏரிகளுக்கு நீரேற்று மூலம் வழங்கும் திட்டத்திற்கு குழாய் பதிக்க தேவையான மேட்டூர், ஓமலூர், எடப்பாடி மற்றும் சங்ககிரி ஆகிய தாலுகாக்களில் 298 ஏக்கர் தனியார் பட்டா நிலங்கள் கையகப்படுத்த வேண்டி உள்ளது. தற்போது முதற்கட்டமாக, மேட்டூர் தாலுகா, பொட்டனேரி கிராமத்தில் மொத்தம் 72 நில உரிமையாளர்களுக்கு சொந்தமான 13 ஏக்கர் 29 சென்ட் நிலங்களுக்கு இழப்பீட்டு தொகை கணக்கிட்டு வழங்கும் விதமாக முதற்கட்டமாக 33 நில உரிமையாளர்களின் பட்டா நிலங்களுக்கான அரசின் இழப்பீட்டு தொகை ரூ.1.10 கோடி அந்தந்த தனியார் நில உரிமையாளர்களின் வங்கி கணக்கிற்கு மின்னணு பரிமாற்றத்தில் அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது. அதற்கான ஆணைகள் இன்றைய தினம் நில உரிமையாளர்களிடம் வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ள நில உரிமையாளர்களுக்கு தொடர்ந்து வழங்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் திவாகர், பொதுப்பணித்துறை நீர்வள ஆதாரத்துறையின் சரபங்கா வடிநில கோட்ட செயற் பொறியாளர் கவுதமன், மேட்டூர் உதவி கலெக்டர் (பொறுப்பு) வேடியப்பன், மேட்டூர் தாசில்தார் ஜி.சுமதி மற்றும் தொடர்புடைய அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story