வேளாண் சட்டங்களை ரத்து செய்யக்கோரி திருப்பூர் மாவட்டத்தில் கடைகள் அடைப்பு - பஸ்கள் வழக்கம்போல் ஓடின
வேளாண் சட்டங்களை ரத்து செய்யக்கோரி விவசாயிகள் அழைப்பு விடுத்து இருந்த முழு அடைப்பு போராட்டத்தை ஏற்று, திருப்பூர் மாவட்டம் முழுவதும் பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன. ஆனால் பஸ்கள் வழக்கம்போல் ஓடின.
திருப்பூர்,
விவசாயிகளை பாதிக்கும் வேளாண் 3 சட்டங்களை திரும்பப் பெற மத்திய அரசை வலியுறுத்தியும், டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் நாடு முழுவதும் முழு அடைப்பு போராட்டம் மற்றும் வேலைநிறுத்தம் நேற்று நடைபெற்றது. இந்த வேலைநிறுத்த போராட்டத்துக்கு தமிழகத்தில் தி.மு.க., காங்கிரஸ், ம.தி.மு.க., கம்யூனிஸ்டு கட்சிகள் ஆதரவு தெரிவித்தன.
மேலும் சி.ஐ.டி.யு., ஏ.ஐ.டி.யு.சி., எல்.பி.எப்., எம்.எல்.எப்., ஐ.என்.டி.யு.சி. உள்ளிட்ட தொழிற்சங்கத்தினர் வேலை நிறுத்தப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தனர். திருப்பூரில் நேற்று காலை முதல் மளிகை கடைகள், டீ கடைகள், பேக்கரிகள், ஜவுளி கடைகள், வீட்டு உபயோக பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள், நகை கடைகள் உள்ளிட்ட பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன. குமரன் ரோட்டில் சில நகைக்கடை, செல்போன் விற்பனை செய்யும் மொத்த விற்பனை கடைகள் திறந்து இருந்தன.
மாநகர் முழுவதும் பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன. திருப்பூர் மாநகராட்சி சந்திப்பு, பழைய பஸ் நிலையம், புதிய பஸ் நிலையம், பி.என்.ரோடு, குமரன் ரோடு, அவினாசி ரோடு, காங்கேயம் ரோடு, மங்கலம் ரோடு, பல்லடம் ரோடு பகுதிகளில் கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன.
திருப்பூர் தெற்கு மற்றும் வடக்கு உழவர் சந்தை செயல்படவில்லை. மிகக்குறைவானவர்களே காய்கறிகளைக் கொண்டு வந்திருந்தனர். தென்னம்பாளையம் மார்க்கெட் காலை 6 மணி வரை செயல்பட்டது. அதன்பிறகு அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டன. திருப்பூர் ஒழுங்குமுறை விற்பனை கூட வளாகத்தில் உள்ள தினசரி மார்க்கெட் நேற்று செயல்படவில்லை. திருப்பூர் காதர்பேட்டை பனியன் விற்பனை கடைகள் முழுவதுமாக அடைக்கப்பட்டிருந்தன. திருப்பூர் மாநகரில் 90 சதவீதத்துக்கு மேல் கடைகள், வணிக நிறுவனங்கள் அடைக்கப்பட்டிருந்தன.
ஆட்டோக்கள், வேன்கள் ஓடவில்லை. அரசு மற்றும் தனியார் பஸ்கள் வழக்கம் போல் ஓடின. அதுபோல் அரசு அலுவலகங்கள் அனைத்தும் செயல்பட்டன. வங்கிகள், பெட்ரோல் விற்பனை நிலையங்கள் வழக்கம் போல் செயல்பட்டன. முக்கிய சாலைகளில் தள்ளுவண்டிகளிலும், சைக்கிளிலும் சிலர் டீ வியாபாரம் செய்தனர். அதுபோல் தள்ளுவண்டிகளில் தக்காளி சாதம், தயிர் சாதம் விற்பனை செய்யப்பட்டது.
மாநகரில் அசம்பாவித சம்பவங்களை தவிர்க்கும் வகையில் 600-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். அனைத்து அரசு அலுவலகங்கள் முன்பும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். ரெயில் நிலையம், பஸ் நிலையங்களில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். மாநகரின் முக்கிய சந்திப்பு பகுதியில், கடைகள், வணிக வளாகங்கள் உள்ள பகுதிகளில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
உடுமலையில் 95 சதவீத கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன. அதே போல் மடத்துக்குளம், குமரலிங்கம், போடிப்பட்டி, குடிமங்கலம், தாராபுரம், மூலனூர், முத்தூர், வெள்ளகோவில், காங்கேயம், பல்லடம், பொங்கலூர், அவினாசி, சேவூர், குன்னத்தூர், ஊத்துக்குளி ஆகிய பகுதிகளில் பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன. இதனால் அத்தியவசிய பொருட்களை வாங்க முடியாமல் பொதுமக்கள் அவதிப்பட்டனர். ஆனால் ஆங்காங்கே ஒரு சில டீக்கடைகள் திறந்து இருந்தன.
மேலும் அசம்பாவிதங்கள் ஏற்படாமல் இருக்க போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். ரோந்து பணியையும் தீவிரப்படுத்தினர்.
Related Tags :
Next Story