ஊட்டியில் பரவலாக மழை: கடும் பனி மூட்டத்தால் படகு சவாரி நிறுத்தம் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்


ஊட்டியில் பரவலாக மழை: கடும் பனி மூட்டத்தால் படகு சவாரி நிறுத்தம் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்
x
தினத்தந்தி 9 Dec 2020 10:02 PM IST (Updated: 9 Dec 2020 10:02 PM IST)
t-max-icont-min-icon

ஊட்டியில் பரவாலாக பெய்த மழை காரணமாக கடும் பனிமூட்டம் ஏற்பட்டது. இதனால் படகு சவாரி நிறுத்தப்பட்டதால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர்.

ஊட்டி, 

கொரோனா குறைந்து வருவதால், ஊரடங்கில் தளர்த்தப்பட்டு உள்ளது. இதையடுத்து நீலகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து சுற்றுலா மையங்களும் நேற்று முன்தினம் திறக்கப்பட்டன. ஊட்டியில் பரவலாக மழை பெய்து வந்தாலும், சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.

இந்த நிலையில் நேற்று ஊட்டி நகரில் கடும் பனிமூட்டம் நிலவியது. இதனால் எல்க்ஹில், மஞ்சனக்கொரை, கோடப்பமந்து, பெர்ன்ஹில், ஊட்டி ஏரி உள்ளிட்ட இடங்களை பனி மூட்டம் சூழ்ந்தது. எதிரே வரும் வாகனங்கள் தெரியாததால் முன்னெச்சரிக்கையாக வாகனங்களை முகப்பு விளக்கை எரிய விட்டபடி வாகன ஓட்டிகள் இயக்கினர்.

ஊட்டி ஏரியில் காலை முதல் மாலை 4 மணி வரை பனிமூட்டம் காணப்பட்டது. இதனால் பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக படகுகள் இயக்கப்படாமல் வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது. குறைந்த எண்ணிக்கையில் மோட்டார் படகுகள், துடுப்பு படகுகள் இயக்கப்பட்டன.

இதில் சுற்றுலா பயணிகள் பனிமூட்டம் மற்றும் கடும் குளிரின் மத்தியில் சவாரி செய்து மகிழ்ந்தனர். அவர்கள் குளிரை போக்க உல்லன் ஆடைகள் அணிந்து இருந்தனர். இருப்பினும் மிதி படகுகள் நிறுத்தப்பட்டதால் படகு இல்லத்துக்கு வந்த சுற்றுலா பயணிகள் சவாரி செய்ய முடியாமல் ஏமாற்றம் அடைந்தனர்.

அதேபோல் தொட்டபெட்டா மலைச்சிகரத்தில் கடும் பனிமூட்டம் நிலவியது. இயற்கை காட்சிகள், அணைகள், அடர்ந்த வனப்பகுதிகளை கண்டு ரசிக்க முடியாமல் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர். எனினும் ஊட்டியில் நிலவிய குளிர்ந்த காலநிலையை அனுபவித்தனர். அதுபோன்று ஊட்டி அருகே உள்ள சூட்டிங் மட்டம் பகுதியிலும் சுற்றுலா பயணிகள் குவிந்து இயற்கை காட்சி அழகை கண்டு ரசித்தனர்.

ஊட்டியில் நேற்றும் பரவலாக மழை பெய்ததால் கடும் குளிர் நிலவியது. இதனால பொதுமக்கள் அவதி அடைந்தனர். மேலும் இங்கு வந்த சுற்றுலா பயணிகள் மழையில் நனையாமல் இருக்க குடைகளை பிடித்தபடி சென்றனர்.

நீலகிரி மாவட்டத்தில் நேற்று காலை 8 மணியுடன் 24 மணி நேரத்தில் முடிவடைந்த மழை அளவு விவரம் (மில்லி மீட்டரில்) வருமாறு:- ஊட்டி-12.7, நடுவட்டம்-15, கிளன்மார்கன் -15, குந்தா-12, அவலாஞ்சி-21, கிண்ணக்கொரை-19, அப்பர்பவானி-17, குன்னூர் -20, உலிக்கல்-35, கோத்தகிரி-32.5, கீழ் கோத்தகிரி-29 உள்பட மொத்தம் 363.80 மழை பதிவாகி உள்ளது. இதன் சராசரி 12.54 ஆகும்.


Next Story