திருமணத்துக்கு மறுத்த இளம்பெண்ணுக்கு கத்திக்குத்து காதலன் தற்கொலை முயற்சி
திருமணத்துக்கு மறுத்த இளம் பெண்ணை கத்தியால் குத்தி விட்டு, காதலன் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது.
கணபதி,
கோவை ரத்தினபுரி வி.சி.என் வீதியில் வாடகைக்கு தனது பெற்றோருடன் வசித்து வருபவர் தர்மபுரியைச் சேர்ந்த விவேக் (வயது29). இவர் செல்போன் டவர் அமைக்கும் பணி செய்து வருகிறார். விவேக்கிற்கும், அதே பகுதியில் வசிக்கும் இளம்பெண் ஒருவருக்கும் காதல் மலர்ந்தது. இந்த விவகாரம் இளம்பெண்ணின் தாயாருக்கு தெரிய வர உடனடியாக தனது மகளைக் கண்டித்துள்ளார். இதனால் அந்த பெண்ணும் விவேக்கின் காதலை துண்டித்து விட்டு கடந்த 2, 3 வாரங்களாக அவரைச் சந்திப்பதையும் தவிர்த்துள்ளார்.
இந்த நிலையில் நேற்று காலையில் இளம்பெண்ணின் தாய் வேலைக்கு சென்ற பிறகு, விவேக் அந்த இளம்பெண்ணின் வீட்டிற்கு சென்றுள்ளார். பின்னர் அந்த பெண்ணிடம், என்னோடு வந்துவிடு, எங்காவது சென்று திருமணம் செய்து வாழலாம் என அழைத்துள்ளார். அதற்கு அந்த பெண் மறுக்கவே விவேக் கட்டாயப்படுத்தி அந்த பெண்ணை தன்னோடு அழைத்து செல்ல முயன்றுள்ளார். ஆனால் அந்த பெண் இங்கிருந்து போய்விடுங்கள், என்னை தொந்தரவு செய்யாதீர்கள் என கண்டித்து, சத்தம் போட்டுள்ளார். அப்போது விவேக் தான் மறைத்துக் கொண்டு வந்திருந்த கத்தியைக் காண்பித்து சத்தம் போடாமல் வந்துவிடு என்று வற்புறுத்தியுள்ளார்.அப்பெண் மறுக்கவே தகறாறு முற்றிய நிலையில் விவேக் தான் வைத்திருந்த கத்தியால் இளம்பெண்ணன் கையில் குத்திவிட்டார்.
இதனை சற்றும் எதிர்பார்க்காத இளம் பெண் அலறியவாறு ரத்த வெள்ளத்தில் மயங்கி கீழே விழுந்தார். அவரது சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் ஓடிவந்து மயங்கி கிடந்த அப்பெண்ணை சிகிச்சைக்காக அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் விவேக் அப்பெண் வீட்டு வாசலில் தான் கொண்டு வந்திருந்த விஷத்தை குடித்தார். விஷம் குடித்த சிறிது நேரத்தில் கீழே மயங்கி விழுந்தார். உடனே அவரையும் அக்கம், பக்கத்தினர் மீட்டு அருகில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.இதுகுறித்து இளம்பெண்ணின் தாயார் அளித்த புகாரின் பேரில் ரத்தினபுரி போலீசார் இளம் பெண்ணை கத்தியால் குத்திய விவேக் மீது பெண்கள் வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story