ஜவுளிக்கடை அதிபர் வீட்டில் திருட்டு: வளர்ப்பு மகளுடன் பெண் கைது - 34 பவுன் நகை- பணம் மீட்பு


ஜவுளிக்கடை அதிபர் வீட்டில் திருட்டு: வளர்ப்பு மகளுடன் பெண் கைது - 34 பவுன் நகை- பணம் மீட்பு
x
தினத்தந்தி 10 Dec 2020 3:15 AM IST (Updated: 9 Dec 2020 10:35 PM IST)
t-max-icont-min-icon

கோவில்பட்டியில் ஜவுளிக்கடை அதிபர் வீட்டில் கைவரிசை காட்டிய பெண், வளர்ப்பு மகளுடன் கைது செய்யப்பட்டார். அவர்களிடம் இருந்து 34 பவுன் நகைமற்றும் பணத்தை போலீசார் மீட்டனர்.

கோவில்பட்டி,

கோவில்பட்டி வெங்கடேஸ்வரா கார்டன் பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணியன் மகன் மாணிக்கம் (வயது 50). இவர் கோவில்பட்டி மெயின்ரோட்டில் ஜவுளிக்கடை நடத்தி வருகிறார். இவருடைய வீட்டில் கடந்த 5-ம் தேதி மர்ம நபர்கள் பீரோவில் வைத்திருந்த 34 பவுன் தங்க நகைகள், ரூ.70 ஆயிரத்தை திருடிச் சென்று விட்டனர்.

இதுபற்றி மாணிக்கம் கோவில்பட்டி மேற்கு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். கோவில்பட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு கலைக்கதிரவன் உத்தரவின் பேரில் மேற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் அய்யப்பன், சப்-இன்ஸ்பெக்டர் குரு சித்திரவடிவேல் மற்றும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.

திருட்டு சம்பவம் நடந்த வீட்டில் கிடைத்த சில தடயங்கள் அடிப்படையில், மணியாச்சி அருகே உள்ள மருதன் வாழ்வு காலனியில் வசிக்கும் வாசிம் மனைவி சண்முக கனி (37), அவருடைய வளர்ப்பு மகளான 17 வயது சிறுமி ஆகியோரைப் பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இதில், மாணிக்கம் வீட்டில் நகைகள் மற்றும் பணத்தை திருடியதை அவர்கள் ஒப்புக் கொண்டனர். அவர்களிடம் இருந்து ஜவுளிக்கடை அதிபர் வீட்டில் திருடிய 34 பவுன் தங்க நகைகள் மற்றும் பணத்தை போலீசார் மீட்டனர். இதை தொடர்ந்து அந்த 2 பேரையும் போலீசார் கைது செய்து தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story