மேலநீலிதநல்லூர் கல்லூரி விவகாரம்: முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியவர்களிடம் அமைச்சர்கள் நேரில் பேச்சுவார்த்தை


மேலநீலிதநல்லூர் கல்லூரி விவகாரம்: முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியவர்களிடம் அமைச்சர்கள் நேரில் பேச்சுவார்த்தை
x
தினத்தந்தி 10 Dec 2020 3:45 AM IST (Updated: 10 Dec 2020 1:08 AM IST)
t-max-icont-min-icon

மேலநீலிதநல்லூர் தேவர் கல்லூரி விவகாரம் தொடர்பாக முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியவர்களிடம் அமைச்சர்கள் ராஜேந்திர பாலாஜி, ராஜலட்சுமி நேரில் பேச்சுவார்த்தை நடத்தினர்.

பனவடலிசத்திரம்,

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் தாலுகா மேலநீலிதநல்லூரில் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் கல்லூரி செயல்பட்டு வருகிறது.

இக்கல்லூரி நிர்வாகம் தொடர்பாக ஏற்பட்ட பிரச்சினையில் கல்லூரி மீட்பு கழகத்தினர், பொதுமக்கள் நேற்று கல்லூரியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழ் பேரரசு கட்சி பொதுச்செயலாளர் இயக்குனர் கவுதமன் மற்றும் அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியினர், தமிழ்நாடு தேவர் பேரவையினர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

போராட்டத்தில் ஈடுபட்டவர்களை சங்கரன்கோவில் விருந்தினர் மாளிகைக்கு வரவழைத்து, அவர்களுடன் பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் ராஜலட்சுமி ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுகுணாசிங், சங்கரன்கோவில் உதவி கலெக்டர் முருகசெல்வி, தாசில்தார் திருமலை செல்வி, மாவட்ட பதிவாளர் பாலசுப்பிரமணியன், அ.தி.மு.க. வடக்கு மாவட்ட செயலாளர் கிருஷ்ணமுரளி என்ற குட்டியப்பா மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

அப்போது அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறுகையில், மேலநீலிநல்லூர் தேவர் கல்லூரி விவகாரம் தொடர்பாக, முதல்-அமைச்சரின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இக்கல்லூரியை தொடர்ந்து நடத்துவதற்கு சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்தார். இதனை ஏற்று, போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.


Next Story