குடோனில் பதுக்கி வைக்கப்பட்ட ரூ.1 கோடி செம்மரக்கட்டைகள் பறிமுதல் - முக்கிய குற்றவாளிக்கு போலீசார் வலைவீச்சு
திருவள்ளூர் அருகே குடோனில் பதுக்கி வைக்கப்பட்ட ரூ.1 கோடி செம்மரக்கட்டைகளை வனத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
திருவள்ளூர்,
திருவள்ளூர் மாவட்டத்தில் செம்மரக்கட்டைகளை பதுக்கி வெளிநாட்டிற்கு ஏற்றுமதி செய்வதாக சென்னை வனத்துறை அதிகாரிக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனை சென்னை வன பாதுகாவலர் ஞானசேகர் தலைமையிலான 10 பேர் கொண்ட குழுவினர் கடந்த 10 நாட்களாக ஆய்வு மேற்கொண்டு வந்தனர்.
இந்நிலையில் நேற்று திருவள்ளூர் அடுத்த கடம்பத்தூர் ஒன்றியம் பாப்பரம்பாக்கம் கிராமத்தில் உள்ள ஒரு குடோனில் செம்மரக்கட்டைகளை பதுக்கி வைத்திருப்பதை கண்டறிந்தனர். அதனையடுத்து மேற்கொண்ட விசாரணையில், முரளி என்பவருக்கு சொந்தமான கிடங்கில் செம்மரக்கட்டைகளை பதுக்கி வெளிநாட்டிற்கு ஏற்றுமதி செய்ததும் தெரியவந்தது.
இதையடுத்து சென்னை வன பாதுகாவலர் சரவணன் தலைமையிலான வனத்துறையினர் விரைந்து வந்து சோதனை செய்ததில், அங்கு ரூ.1 கோடி மதிப்பிலான 10 டன் செம்மரக்கட்டைகள் இருப்பது தெரியவந்தது. மேலும் விசாரணையில், செங்குன்றத்தை சேர்ந்த கதிரவன் என்பவர் குடோனை வாடகைக்கு எடுத்திருப்பதும், ஏற்கனவே கதிரவன் மீது செம்மரக்கடத்தல் வழக்கு நிலுவையில் இருப்பதும் தெரியவந்தது. இதனையடுத்து பறிமுதல் செய்யப்பட்ட செம்மரங்களை திருவள்ளூர் வனத்துறை அதிகாரிகளிடம் சென்னை வனத்துறையினர் ஒப்படைத்தனர். இதுகுறித்து வனத்துறை அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக உள்ள கதிரவனை தேடி வருகின்றனர்.
Related Tags :
Next Story