குடிசைகளை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து கூவம் ஆற்றில் இறங்கி நூதன போராட்டம்
சென்னை சத்யவானி முத்துநகரில் குடிசைகளை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து கூவம் ஆற்றில் இறங்கி 15 பேர் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களுடன் போலீசார் 5 மணி நேரம் பேச்சுவார்த்தையில் நடத்திய பிறகு ஆற்றில் இருந்து வெளியேறினர்.
சென்னை,
ஒவ்வொரு ஆண்டும் வடகிழக்கு பருவமழை தொடங்கும் முன்பு, பொது மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தாமல் இருக்க, தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதேபோல் தலைநகரான சென்னையிலும், பெருநகர சென்னை மாநகராட்சி, ஊரக உள்ளாட்சி துறை இணைந்து, மழை நீர் தேங்காமல் இருப்பதற்கும், வெள்ளம் ஏற்படாமல் இருப்பதற்கும் முன்கூட்டியே பணிகளை தொடங்கி பாதுகாப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்துவர்.
இந்தநிலையில் கடந்த 2015-ம் ஆண்டு பெய்த கன மழையால் கூவம் ஆற்றில் வெள்ள பெருக்கு ஏற்பட்டு, குடியிருப்புகளில் வெள்ள நீர் புகுந்து பொது மக்களின் வாழ்வாதாரம் வெகுவாக பாதிக்கப்பட்டது. இதையடுத்து கூவம் ஆற்றை தூர்வாரவும், மறுசீரமைப்பு செய்யவும் தமிழக அரசு சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டது.
அதன்படி தமிழக அரசு, சென்னை ஆறுகள் சீரமைப்பு அறைக்கட்டளை உருவாக்கி, கூவம் ஆறு சீரமைப்பு திட்டத்தின் கீழ், கூவம் ஆறு எல்லைக்குட்பட்ட பகுதிகளை சீரமைத்து, ஆற்றை விரிவுப்படுத்தி, பக்கவாட்டு சுவர் எழுப்பி, கரையோரத்தை பலப்படுத்தி வெள்ள பாதிப்பு ஏற்படாமல் தடுக்கும் பணியை தொடங்கியது. இந்த பணிகளை பெருநகர சென்னை மாநகராட்சி, பொது பணித்துறை, தமிழ்நாடு குடிசைமாற்று வாரியம் ஆகியவற்றுடன் இணைந்து சென்னை ஆறுகள் சீரமைப்பு அறைக்கட்டளை செய்து வந்தது.
இதற்காக கூவம் ஆற்று பகுதியில் குடியிருக்கும் பொதுமக்களை அப்புறப்படுத்தி, அவர்களுக்கு திருவெற்றியூர், அத்திப்பட்டு, நாவலூர், பெரும்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் தங்க வைக்க ஏற்பாடு செய்யப்பட்டது. அந்தவகையில் கூவம் ஆற்று கரையோரம் வசிக்கும், சென்னை பல்லவன் சாலையில் உள்ள சத்யவானி முத்து நகர் பகுதி மக்களை வெளியேற்றி, அவர்களை பெரும்பாக்கத்தில் உள்ள குடியிருப்புகளில் தங்க வைப்பதற்கான ஏற்பாடுகள் கடந்த ஆண்டு மேற்கொள்ளப்பட்டது.
இந்தநிலையில் அங்கிருந்து 2 ஆயிரத்து 92 குடும்பங்கள், கடந்த ஆண்டு டிசம்பர் 29-ந்தேதி பெரும்பாக்கத்துக்கு மறுகுடியமர்த்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அதன்படி கடந்த ஜனவரி 13-ந்தேதி வரை 1,745 குடும்பங்கள் மறுகுடியமர்த்தப்பட்டன. அப்போது 10-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்பில் தங்கள் குழந்தைகள் படிப்பதாக கூறி 347 குடும்பங்கள் கால அவகாசம் கேட்டனர். இதையடுத்து, மாநகராட்சியும், சென்னை நதிகள் சீரமைப்பு அறக்கட்டளையும் அவர்களுக்கு கால அவகாசம் வழங்கியது.
இந்தநிலையில், கடந்த செப்டம்பர் மாதம் முதல், மாநகராட்சி அதிகாரிகள், அப்பகுதி மக்களை விரைவாக மறுகுடி பெயர வேண்டும் என்று அறிவுறுத்தி வந்தனர். இதில் பெரும்பான்மையான குடும்பத்தினர் மறுகுடியமர்ந்துவிட்டனர். நேற்றும் பலர் அரசு உதவியுடன் மறுகுடியமர்வதற்கு சென்றனர். ஆனால் அதில் 15 குடும்பத்தினர் மட்டும் அந்த பகுதியை விட்டு செல்ல மறுத்து, குடும்பத்திற்கு ஒருவர் வீதம் கூவத்தில் இறங்கி நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து அங்கு பதற்றம் நிலவியது. அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீஸ் உயர் அதிகாரிகள் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். மதியம் 12 மணி அளவில் போராட்டத்தில் ஈடுபட்ட 15 நபர்கள், மாலை 5 மணியளவில் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டு, ஆற்றில் இருந்து வெளியேறினர். மேலும் அவர்களை பெரும்பாக்கத்தில் குடியமர்த்த தேவையான நடவடிக்கைகளை அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.
இதுகுறித்து 15 குடும்பங்களை சேர்ந்தவர்கள் கூறும்போது, தங்களுக்கு பெரும்பாக்கத்தில் ஒதுக்கப்பட்ட வீடுகள் வேண்டாம் என்றும், புளியந்தோப்பு மற்றும் வியாசர்பாடி பகுதியில் வீடுகள் ஒதுக்கி கொடுக்க வேண்டும் கோரிக்கை வைத்தனர்.
Related Tags :
Next Story