4 மாநிலங்களில் இருந்து மும்பை வந்த ரெயில் பயணிகள் 88 பேருக்கு கொரோனா
டெல்லி, குஜராத் உள்ளிட்ட 4 மாநிலங்களில் இருந்து மும்பை வந்த 88 ரெயில் பயணிகளுக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது.
மும்பை,
டெல்லி, குஜராத், ராஜஸ்தான், கோவா ஆகிய மாநிலங்களில் கொரோனா தொற்று அதிகரித்து இருப்பதால் அந்த மாநிலங்களில் இருந்து மராட்டியத்திற்கு வரும் விமான, ரெயில் பயணிகள் கொரோனா பரிசோதனை செய்து தொற்று இல்லை என்ற சான்றிதழ் தாக்கல் செய்வது கட்டாயம் என்று மராட்டிய அரசு கடந்த மாதம் உத்தரவிட்டது.
அதன்படி ரெயில் நிலையங்களில் கொரோனா பரிசோதனை சான்றிதழை சரிபார்க்க வார்டு அதிகாரிகளை மாநகராட்சி நியமித்து உள்ளது. கொரோனா பரிசோதனை செய்யாமல் வரும் பயணிகளுக்கு தொற்று அறிகுறி உள்ளதா என்று கண்டறிந்து அறிகுறி இருந்தால் உடனடியாக ஆன்டிஜென் முறையில் பரிசோதனை செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.
இந்தநிலையில் மும்பை மாநகராட்சிக்கு உட்பட்ட ரெயில் நிலையங்களில் இதுவரை நடத்திய பரிசோதனையில் 88 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. இவர்கள் அருகில் உள்ள கொரோனா சிகிச்சை மையத்தில் அனுமதிக்கப்பட்டனர்.
இவர்களில் தாதரில் 26 பேரும், பாந்திரா டெர்மினலில் 25 பேரும், மும்பை சென்ட்ரலில் 18 பேரும், போரிவிலியில் 9 பேரும், லோக்மானிய திலக் டெர்மினலில் 8 பேரும் அடங்குவர்.
மொத்தம் 2 லட்சம் பயணிகள் கொரோனா அறிகுறி சோதனைக்கு உட்படுத்தப்பட்டு உள்ளனர். இதில் அதிகபட்சமாக போரிவிலி ரெயில் நிலையத்தில் 68 ஆயிரத்து 425 பேருக்கும், மும்பை சென்ட்ரலில் 43 ஆயிரத்து 640 பேருக்கும் கொரோனா அறிகுறி சோதனை மற்றும் பரிசோதனை நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
Related Tags :
Next Story