நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலையுடன் தொடர்புடைய வழக்கு: ரூ.2½ கோடி போதைப்பொருளுடன் தலைமறைவு குற்றவாளி கைது


நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலையுடன் தொடர்புடைய வழக்கு: ரூ.2½ கோடி போதைப்பொருளுடன் தலைமறைவு குற்றவாளி கைது
x
தினத்தந்தி 10 Dec 2020 3:00 AM IST (Updated: 10 Dec 2020 6:09 AM IST)
t-max-icont-min-icon

நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலையுடன் தொடர்புடைய போதைப்பொருள் வழக்கில் தலைமறைவு குற்றவாளி கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்து ரூ.2 கோடியே 50 லட்சம் மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது.

மும்பை,

இந்தி நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலையுடன் தொடர்புடைய போதைப்பொருள் வழக்கு குறித்து போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். இந்த வழக்கில் சுஷாந்த் சிங்கின் காதலியும், நடிகையுமான ரியா சக்ரவர்த்தி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். சுஷாந்த் சிங்கிற்கு போதைப்பொருள் வாங்கி கொடுத்தது மற்றும் பயன்படுத்தியதாக அவர் மீது குற்றம்சாட்டப்பட்டது. தற்போது அவர் ஜாமீனில் வெளியே உள்ளார்.

இதேபோல ரியாவின் தம்பி சோவிக்கும் கைது செய்யப்பட்டு, கடந்த சில நாட்களுக்கு முன்பு தான் ஜாமீனில் வெளியே வந்தார்.

மேலும் போதைப்பொருள் கும்பலை சேர்ந்த பலர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர்.

இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசார் லோகண்ட்வாலா உள்ளிட்ட மும்பையின் சில இடங்களில் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது போதைப்பொருள் கும்பலை சேர்ந்த தலைமறைவு குற்றவாளியான ரெகல் மகாகல் என்பவர் கைது செய்யப்பட்டார். மேலும் அவரிடம் இருந்து ரூ.2 கோடியே 50 லட்சம் மதிப்புள்ள ‘மலானா கிரீம்‘ என்ற போதைப்பொருளை பறிமுதல் செய்தனர். சுஷாந்த் சிங் தற்கொலையுடன் தொடர்புடைய வழக்கில், தற்போது தான் அதிக அளவில் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்தநிலையில் கைதான ரெகல் மகாகல் நேற்று கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை வருகிற 11-ந் தேதி வரை போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க கோர்ட்டு உத்தரவிட்டது.

இவரிடம் நடத்தப்படும் விசாரணையில் போதைப்பொருள் கும்பல் பற்றிய முக்கிய தகவல்கள் தெரியவரும் என கூறப்படுகிறது.

Next Story