ஆரல்வாய்மொழியில் பரபரப்பு கூட்டுறவு நூற்பாலையில் தலைவர், துணை தலைவர் உள்ளிருப்பு போராட்டம்


ஆரல்வாய்மொழியில் பரபரப்பு கூட்டுறவு நூற்பாலையில் தலைவர், துணை தலைவர் உள்ளிருப்பு போராட்டம்
x
தினத்தந்தி 10 Dec 2020 9:51 AM IST (Updated: 10 Dec 2020 9:51 AM IST)
t-max-icont-min-icon

ஆரல்வாய்மொழி கூட்டுறவு நூற்பாலையில் தலைவர், துணை தலைவர் திடீரென உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். கைத்தறித்துறை இயக்குனரை கண்டித்து இந்த போராட்டம் நடத்தப்பட்டது.

ஆரல்வாய்மொழி,

ஆரல்வாய்மொழியில் கன்னியாகுமரி மாவட்ட கூட்டுறவு நூற்பாலை இயங்கி வருகிறது. இங்கு 500 தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகிறார்கள். இந்த ஆலையின் தலைவராக சகாயராஜ், துணை தலைவராக சொக்கலிங்கமும் உள்ளனர்.

இந்த நிலையில் நேற்று மாலை தலைவர் சகாயராஜ், துணை தலைவர் சொக்கலிங்கம், நிர்வாகக்குழு உறுப்பினர் சாம்ராஜ் ஆகியோர் திடீரென அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் ஆலையில் பரபரப்பு ஏற்பட்டது.

கைத்தறித்துறை இயக்குனரை கண்டித்து...

இதுகுறித்து ஆலையின் தலைவர் சகாயராஜ் கூறுகையில், கடந்த 2 வருடமாக கைத்தறி மற்றும் துணி நூல் துறை இயக்குனர் கருணாகரன் நிர்வாகக்குழு எடுக்கின்ற தீர்மானங்கள் அனைத்தையும் நிராகரித்து வருகிறார். அவர்களுக்கு தேவையான தீர்மானங்களை மட்டும் நிறைவேற்ற வற்புறுத்துகிறார். சமீபத்தில் ஆலை மேலாளரின் நடவடிக்கை சரியில்லாததால் அனைத்து தொழிற்சங்கங்களும் அவரை மாற்றுவதற்கான தீர்மானங்களை நிறைவேற்றி நிர்வாகக்குழு பார்வைக்கு கொண்டு வந்தனர்.

ஆனால் கைத்தறி துறை இயக்குனர் சம்பந்தப்பட்ட ஆலை மேலாளர் மீது நடவடிக்கை எடுக்காமல் ஆலையில் பணி புரியும் பணியாளரை இடமாற்றம் செய்து நடவடிக்கை எடுத்துள்ளார். எனவே தான் கைத்தறி துறை இயக்குனர் கருணாகரனை கண்டித்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு இருக்கிறோம். இதற்கு ஒரு முடிவு கிடைக்கும் வரை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றார்.

பேச்சுவார்த்தை

இதனை தொடர்ந்து உள்ளிருப்பு போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து அண்ணா தொழிற்சங்க செயலாளர் மாசானம், தொ.மு.ச. தொழிற் சங்க பொதுச்செயலாளர் மகராஜ பிள்ளை, சி.ஐ.டி.யு. தொழிற்சங்க தலைவர் வடிவேல் குமார் ஆகியோர் சகாயராஜை சந்தித்து ஆதரவு தெரிவித்தனர்.

இதற்கிடையே தோவாளை ஒன்றிய அ.தி.மு.க. செயலாளர் கிருஷ்ணகுமார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய்சுந்தரம், மேலிடத்தில் பேசி உள்ளார். இதனால் நல்ல முடிவு கிடைக்கும் என்று கூறினார். இதனை தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது.

Next Story