நல்லூர் பகுதியில் சாலையோரம் கொட்டப்படும் குப்பையால் சுகாதார சீர்கேடு அப்புறப்படுத்த பொதுமக்கள் கோரிக்கை


நல்லூர் பகுதியில் சாலையோரம் கொட்டப்படும் குப்பையால் சுகாதார சீர்கேடு அப்புறப்படுத்த பொதுமக்கள் கோரிக்கை
x
தினத்தந்தி 10 Dec 2020 2:41 PM IST (Updated: 10 Dec 2020 2:41 PM IST)
t-max-icont-min-icon

நல்லூர் பகுதியில் சாலையோரம் கொட்டப்படும் குப்பையால் சுகாதார சீர்கேடு ஏற்படும் வாய்ப்பு உள்ளது என்றும், எனவே குப்பையை அப்புறப்புறப்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நல்லூர், 

நகரங்களில் நாளுக்குநாள் பெருகும் மக்கள் தொகையாலும், தொழிற்சாலை பெருக்கத்தாலும் குப்பைகள் அதிகமாக குவிந்து வருகிறது. இதனால் நகரங்களில் குப்பைகளை அள்ளுவதே பெரிய சவாலாக உள்ளது. தினமும் காலையில் குப்பைகளை அள்ளி சென்றாலும், சிறிது நேரத்தில் மீண்டும் குப்பைகள் குவிந்து விடுகிறது. அது மட்டுமல்ல மழை காலங்களில் குப்பையால் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது.

மேலும் குப்பையில் இருந்து உற்பத்தியாகும் கொசு,ஈக்களால் மக்கள் பெரும் இன்னலுக்கு ஆளாகிறார்கள். திருப்பூரில் சாலையோரம் குப்பை தொட்டிகள் வைக்கப்பட்டு இருந்த நிலையில், தற்போது குப்பை தொட்டிகள் அப்புறப்படுத்தப்பட்டன. இதனால் குப்பை கொட்டுபவர்கள் சாலையோரம் குப்பைகளை கொட்டி வருகிறார்கள். இப்படி கொட்டப்படும் குப்பைகள் பல நாட்கள் அள்ளப்படாமல் குவிந்து கிடக்கிறது.

திருப்பூர், செரங்காடு பகுதி கடுகுக்காரர் தோட்டம் வழியாக சந்தராபுரம் செல்லும் சாலையில் பாரதி நகர் அருகே குப்பைகள் சாலை நெடுகிலும் குவிந்து கிடக்கிறது. இந்த குப்பைகள் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக அகற்றப்படாமல் உள்ளது. மேலும் மழை பெய்து வருவதால் கடும் துர்நாற்றம் வீசுகிறது. இதனால் அவ்வழியாக வருபவர்கள் துர்நாற்றம் தாங்க முடியாமல் மூக்கை மூடிக்கொண்டு சாலையை கடக்க வேண்டிய நிலை ஏற்பட்டு வருகிறது.

மேலும் அப்பகுதியில் குவிந்துள்ள குப்பையால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது. எனவே மாநகராட்சி சுகாதாரத்துறை அதிகாரிகள் கவனத்தில் கொண்டு உடனடியாக அப்பகுதியில் தூய்மைப்படுத்த வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர்.

Next Story