நெமிலி அருகே முளைத்து நாற்றாக மாறிய 10 ஆயிரம் மூட்டை நெல் கொள்முதல் செய்யப்படாததால் விவசாயிகள் பாதிப்பு


நெமிலி அருகே முளைத்து நாற்றாக மாறிய 10 ஆயிரம் மூட்டை நெல் கொள்முதல் செய்யப்படாததால் விவசாயிகள் பாதிப்பு
x
தினத்தந்தி 10 Dec 2020 3:46 PM IST (Updated: 10 Dec 2020 3:46 PM IST)
t-max-icont-min-icon

நெமிலி அருகே நேரடி நெல்கொள்முதல் நிலையத்துக்கு கொண்டு வரப்பட்ட நெல்மூட்டைகளை கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரம் மூட்டை நெல் மழையில் நனைந்து, முளைவிட்டு நாற்றாக காட்சியளிக்கிறது.

நெமிலி, 

ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலியை அடுத்த தென்னல் மற்றும் எஸ்.கொளத்தூர் ஆகிய பகுதிகளில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் செயல்பட்டு வருகிறது. சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள் தங்கள் நிலங்களில் விளையும் நெல்லை விற்பனைக்கு கொண்டு வந்து விற்பனை செய்து வருகின்றனர்.

இந்தநிலையில் கடந்த நவம்பர் மாதம் 23-ந் தேதி முதல் நெல் கொள்முதல் செய்வது அரசால் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் நேரடி கொள்முதல் நிலையங்களில் விவசாயிகள் விற்பனைக்காக கொண்டுவந்திருந்த 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் போதிய பாதுகாப்பு வசதி இல்லாமல் வைக்கப்பட்டிருந்தது.

புயல் காரணமாக தொடர்ந்து பெய்துவரும் மழையில் நெல் மூட்டைகள் நனைந்து முளைவிட்டு நாற்று போல் காட்சியளிக்கிறது. இதனால் விவசாயிகள் பாதிப்புக்குள்ளாகி உள்ளனர்.

இதுகுறித்து சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் பலமுறை கூறியும் தேவையான நடவடிக்கைகள் எடுக்கவில்லை என்றும், விவசாயிகள் கடன் பெற்று விளைவித்த நெல் வீணாகிப்போனதால் செய்வதறியாது தவித்து வருகின்றனர். எனவே மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுத்து பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு தேவையான நிவாரணம் வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story