திருவண்ணாமலையில் ரியல் எஸ்டேட் அதிபர் கொலை வழக்கில் மேலும் 3 பேர் கைது
திருவண்ணாமலையில் நடந்த ரியல் எஸ்டேட் அதிபர் கொலை வழக்கில் மேலும் 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
திருவண்ணாமலை,
திருவண்ணாமலை காந்திநகர் 3-வது தெருவை சேர்ந்தவர் பங்க் பாபு (வயது 47). ரியல் எஸ்டேட் அதிபர். இவர் கடந்த 3-ந் தேதி அதேப்பகுதியில் உள்ள டீக்கடைக்கு சென்ற போது மர்ம கும்பலால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இவர் கடந்த 2017-ம் ஆண்டு திருவண்ணாமலை நகர அ.தி.மு.க. செயலாளராக இருந்த கனகராஜ் வெட்டி கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கிய குற்றவாளி ஆவார்.
அதனால் பழிக்கு பழியாக பங்க் பாபு கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று கூறப்பட்டது. 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டு போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். விசாரணையில் அ.தி.மு.க. நகர செயலாளர் கனகராஜ் கொலை செய்யப்பட்டதற்கு பழிக்கு பழியாக கூலிப்படை வைத்து பங்க் பாபு கொலை செய்யப்பட்டது உறுதியானது.
அதைத்தொடர்ந்து இதுதொடர்பாக கூலிப்படையை ஏவிய கனகராஜின் மனைவி, மாமியார் உள்பட 3 பேரும், கூலிப்படையினருக்கு பணம் பட்டுவாடா செய்த 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி கனகராஜ் மனைவியின் தம்பி விவேகானந்தன் (30), அவரது நண்பர்கள் கார்த்திக் (26), ராஜேஷ் (28) ஆகிய 3 பேரை நேற்று போலீசார் கைது செய்தனர்.
விவேகானந்தனுக்கு உதவும் வகையில் அவரது நண்பர்கள் கார்த்திக்கும், ராஜேசும், கொலை செய்யப்பட்ட பங்க் பாபு எங்கெங்கு செல்கிறார் என்று அவரது நடவடிக்கைகளை கண்காணித்து கூலிப்படையினருக்கு தெரிவித்ததாக போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது. இச்சம்பவம் தொடர்பாக இதுவரை 8 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
Related Tags :
Next Story