ராமநாதபுரத்தை சேர்ந்தவரிடம் முகநூலில் அமெரிக்க பெண் போல் பழகி ரூ.3½ லட்சத்தை சுருட்டியவர் யார்?
முகநூல் மூலம் அமெரிக்க பெண் போல் பழக்கமாகி ராமநாதபுரத்தை சேர்ந்தவரிடம் ரூ.3½ லட்சம் சுருட்டியவர் யார்? என்பது தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ராமநாதபுரம்,
ராமநாதபுரத்தை அடுத்துள்ள தாமரைக்குளம் அருகே உள்ள ரெட்டையூரணி மேற்குத்தெருவை சேர்ந்தவர் சிவஹரி. குவைத் நாட்டில் தனியார் நிறுவனம் ஒன்றில் வேலைபார்த்து வருகிறார். இவருக்கு முகநூல் (பேஸ்புக்) மூலம் அமெரிக்காவை சேர்ந்த கிளாரா என்ற பெண் ஒருவரின் நட்பு கிடைத்தது. நீண்டநாட்களாக இவர்கள் 2 பேரும் முகநூலில் தொடர்பில் இருந்துள்ளனர்.
இந்தநிலையில் அமெரிக்க பெண் கிளாரா, தனது தந்தைக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டு சென்னையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு இருப்பதாகவும், சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று டாக்டர்கள் கூறியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் மாற்று சிறுநீரகம் ஏற்பாடு செய்து விட்டதாகவும், அறுவை சிகிச்சைக்கு உரியதொகை செலுத்த வேண்டும் என்பதால் அதனை தந்து உதவினால் சென்னைக்கு வரும்போது கட்டாயம் திரும்பி தந்து விடுவதாகவும் கூறியுள்ளார். இதை நம்பிய சிவஹரி அவர் கூறியபடி கடந்த ஆகஸ்டு 25-ந் தேதி முதல் 28-ந் தேதி வரையிலான கால காட்டத்தில் 4 தவணைகளில் ரூ.3 லட்சத்து 52 ஆயிரத்தை ஆன்லைன் பரிவர்த்தனை மூலம் கிளாரா தெரிவித்த வங்கி கணக்கில் செலுத்தி உள்ளார். பணத்தை பெற்றுக்கொண்ட கிளாரா அறுவை சிகிச்சை முடிந்ததும் தகவல் தெரிவிப்பதாக கூறியுள்ளார்.
இதன்பின்னர் அந்த சமூகவலை தள இணைப்பை அந்த பெண் துண்டித்து விட்டார். இதையடுத்து அந்த பெண் அமெரிக்க பெண் போல் தன்னிடம் பேசி பழகி ஏமாற்றி பணத்தை மோசடி செய்துள்ளதை உணர்ந்த சிவஹரி, இதுகுறித்து டி.ஜி.பி. அலுவலகத்திற்கு ஆன்லைன் மூலம் புகார் செய்தார். அதன் அடிப்படையில் ராமநாதபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கார்த்திக் உத்தரவின்படி குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து அந்த பெண் உண்மையிலேயே அமெரிக்காவில் இருந்து பேசினாரா அல்லது அமெரிக்காவில் இருந்து பேசுவது போல் ஏமாற்றி உள்ளாரா என விசாரித்து வருகின்றனர்.
மேலும் அந்த பெண் வழங்கிய வங்கி கணக்கு எண் உள்ளிட்ட விவரங்களின் அடிப்படையில் சைபர் கிரைம் போலீசார் உதவியுடன் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story