மாரண்டஅள்ளி அருகே விவசாயி எரித்துக்கொலை மனைவி, மகன்களிடம் போலீசார் விசாரணை
மாரண்டஅள்ளி அருகே விவசாயி எரித்துக்கொலை செய்யப்பட்டார். இதுகுறித்து மனைவி மற்றும் மகன்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது.
பாலக்கோடு,
தர்மபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி அருகே சக்கிலிநத்தம் கிராமத்தை சேர்ந்தவர் அய்யப்பன் (வயது 46). விவசாயி. இவருடைய மனைவி முனியம்மாள் (40). இவர்களுக்கு மணி (25), சபரி (23) என்ற 2 மகன்கள் உள்ளனர். இந்தநிலையில் முனியம்மாளுக்கு, ஈச்சம்பள்ளம் பகுதியை சேர்ந்த ஒருவருடன் கள்ளத்தொடர்பு இருப்பதாக அய்யப்பன் சந்தேகித்து வந்தார்.
இதன் காரணமாக கணவன்-மனைவிக்கு இடையேஅடிக்கடி குடும்பத் தகராறு ஏற்பட்டு வந்தது. கடந்த 2 மாதங்களுக்கு முன்பு ஏற்பட்ட தகராறு காரணமாக முனியம்மாள் கோபித்துக்கொண்டு ஈச்சம்பள்ளத்தில் உள்ள தனது பெற்றோர் வீட்டிற்கு சென்று விட்டார். இதனிடையே அய்யப்பன் கடந்த 7-ந் தேதி இரவு மோட்டார்சைக்கிளில் வீட்டில் இருந்து வெளியே சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை.
இந்தநிலையில் சக்கிலிநத்தம் அருகே உள்ள முகுடு மடுவு வனப்பகுதியில் இருந்து துர்நாற்றம் வீசுவதாக மாரண்டஅள்ளி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜாபர்உசேன், பாலக்கோடு தாசில்தார் ராஜா, வனவர் அருணா மற்றும் அலுவலர்கள் சம்பவ இடத்திற்கு சென்று பார்த்தனர். அப்போது அங்கு குழியில் இருந்து துர்நாற்றம் வீசியது. இதையடுத்து அந்த இடத்தை தோண்டி பார்த்தபோது தீ வைத்து எரிக்கப்பட்டு உடல் அழுகிய நிலையில் ஆண் ஒருவர் பிணமாக கிடப்பது தெரியவந்தது.
இதுகுறித்து போலீசார் அக்கம் பக்கத்தினரிடம் விசாரணை நடத்தினர். அப்போது தீயில் எரிந்த நிலையில் இருந்தது அய்யப்பன் என்பதும், அவரை மர்ம நபர்கள் தீவைத்து எரித்துக்கொலை செய்து புதைத்து இருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவருடைய உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அய்யப்பன், கள்ளக்காதல் விவகாரத்தில் கொலை செய்யப்பட்டாரா? அவரை தீ வைத்து எரித்து கொன்று புதைத்த நபர்கள் யார்? என்பது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மனைவி மற்றும் மகன்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story