தூத்துக்குடி மாநகருக்கு விடிவு காலம் எப்போது? வடியாத மழைநீரால் மக்கள் அவதி: சேதமடைந்த சாலையில் மரக்கன்று நட்டு போராட்டம்
தூத்துக்குடியில் வடியாத மழைநீரால் வேதனை அடைந்த மக்கள் விடிவுகாலம் எப்போது? என்று எதிர்பார்த்து உள்ளனர். மேலும் சேதமடைந்த சாலையில் மரக்கன்று நட்டு போராட்டம் நடத்தினர்.
தூத்துக்குடி,
தூத்துக்குடி மாநகரம் மழைக்காலங்களில் தண்ணீரில் தத்தளிப்பது வாடிக்கையாகி விட்டது. ஒவ்வொரு ஆண்டும் குடியிருப்புகளை சுற்றி பல நாட்களாக மழைநீர் வடியாமல் தேங்கி நிற்பதும், அதனால் மக்கள் அவதிப்படுவதும் தொடர்கதையாக உள்ளது. தூத்துக்குடி மாநகரில் மழைநீர் எளிதாக வழிந்தோடுவதில் சிரமம் உள்ளது.
கடந்த 2015-ம் ஆண்டு தூத்துக்குடியில் மிக கனமழை பெய்தது. காட்டாற்று வெள்ளமும் கட்டுப்பாடு இன்றி மாநகரை சூழ்ந்தது. தூத்துக்குடி மாநகரமே தண்ணீரில் தத்தளித்தது. இதனால் மக்கள் அவதிக்குள்ளாகினர். இந்த ஆண்டும் வடகிழக்கு பருவமழை காரணமாக மாநகரம் முழுவதும் மழைநீர் தேங்கி கிடக்கிறது. இந்த மழைநீரை அகற்ற மாநகராட்சி அதிகாரிகள் போராடி வருகின்றனர். ஆனாலும் வெள்ளம் வடிந்தபாடில்லை.
இதனால் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தூத்துக்குடி பிரையண்ட் நகர் 12-வது தெரு பகுதியில் சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதி இல்லாமல் பொதுமக்கள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். அந்த பகுதியில் சமீபத்தில் பெய்த மழை காரணமாக சேதமடைந்த சாலையில் மழைநீர் தேங்கி கிடக்கிறது. இதனால் பொதுமக்கள் அந்த நீரில் நடந்து செல்வதால் பல்வேறு நோய்களுக்கு ஆளாகி வருகின்றனர்.
ஆகையால் அந்த பகுதியில் உடனடியாக சாலையை சீரமைக்க வேண்டி பொதுமக்கள் வாழை மரக்கன்றுகளை நட்டு நூதன போராட்டம் நடத்தினர். போராட்டத்துக்கு பா.ஜனதா 45-வது வார்டு தலைவர் கணேசன் தலைமை தாங்கினார். போராட்டத்தில் கோரிக்கையை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். இதில் பா.ஜனதாவினர் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.
கடந்த 2015-ம் ஆண்டு தூத்துக்குடியில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளை தொடர்ந்து மாநகராட்சி பகுதியில் பெருமழை காலத்தில் வெள்ளநீரை வெளியேற்ற மழைநீர் வடிகால் அமைக்கும் திட்டம் தயாரிக்கப்பட்டது. 3 கட்டங்களாக இந்த திட்டத்தை நிறைவேற்ற திட்டமிடப்பட்டு, முதல் கட்டமாக ரூ.96.12 கோடியில் 6 பணிகள் தொடங்கப்பட்டன.
இதில் நகருக்கு வெளியே இருந்து நகருக்குள் வரும் காட்டாற்று வெள்ளத்தை தடுத்து கால்வாய்கள் அமைத்து கடலுக்கு திருப்பி விடுதல், நகருக்குள் வரும் தண்ணீரை சேமித்து வைக்க சி.வ.குளத்தை ரூ.11 கோடியே 50 லட்சம் செலவில் தூர்வாருதல் போன்ற பணிகள் செயல்படுத்தப்பட்டன. இதில் சி.வ.குளம் தூர்வாரப்பட்ட நிலையிலும், அங்கு நீர்வரத்து இன்றி காணப்படுகிறது. மாறாக மழைநீர் ஊருக்குள்ளேயே தேங்கி கிடக்கிறது. அதேபோன்று மழைநீர் வடிகால் வசதியும் முழுமையாக முடிக்கப்படாமல் இழுத்துக்கொண்டே போவதால், மக்களின் துயரங்களுக்கு முடிவு இல்லாமல் சென்று கொண்டு இருக்கிறது.
தூத்துக்குடி மாநகரில் கடந்த 2008-ம் ஆண்டு தொடங்கப்பட்ட பாதாள சாக்கடை திட்டப்பணிகளும் இன்னும் முடிவடையவில்லை. இந்த நிலையில் ஸ்மார்ட்சிட்டி திட்ட பணிகளுக்காக ஆங்காங்கே சாலைகள் தோண்டப்பட்டு உள்ளன. புதிதாக அமைக்கப்பட்ட மழைநீர் வடிகால் பணியும் முடிக்கப்படவில்லை.
இதனால் தூத்துக்குடி மாநகரம் ஆண்டுதோறும் மழைக்காலத்தில் தண்ணீரில் தத்தளித்து கொண்டு இருக்கிறது. இதற்கு விடிவுகாலம் எப்போது வரும்? என்று மக்கள் வேதனையுடன் எதிர்பார்த்து உள்ளனர்.
Related Tags :
Next Story